Saturday, January 19, 2013

அமராவதிக் கரையோரம்

இந்த வலைத் தளத்தை அடிக்கடி திறந்து பார்ப்பதுண்டு. சில ஆண்டுகளாக பதிவுகள் இல்லாமல் இருக்கும் இந்த பிளாக்கைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பர் இளவஞ்சியின் நினைவு வந்து போகிறது.

அவர் பணி நிமித்தமாக யூ.எஸ் சென்ற பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை. பழைய பதிவர்கள் உதயகுமார் போன்றோரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதும் தெரியவில்லை.இந்தத் தளத்தில் ஏதேனும் பதிவிட்டால் யாராவது கண்ணில் பட்டு விடாதா என்ற நப்பாசை..

கொங்குச் சீமையைப் பிண்ணனியாகக் கொண்ட ஒரு பதிவை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

********

இது ஒரு மெகா சீரியல். இப்போது நாம் பார்க்கவிருப்பது அதில் ஒரு எபிசோடு. முந்தைய பகுதிகளைப் பார்க்காமல் இதைக் கண்டால் புரியாது என்பதால் பின்னணி என்ற பெயரில் ஒரு முன் கதைச் சுருக்கம்.

நாற்பத்து மூன்று வீடுகளே உள்ள சின்னஞ்சிறு கிராமம் செல்லப் பிள்ளை புதூர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும், இப்போது பால் சொசைட்டியாக இயங்கும் பழைய திண்ணைப் பள்ளிக்கூடக் கட்டிடமும், அவை இரண்டுக்கும் இடையில் கிழக்குப் பார்த்து அமராவதி ஆற்றை நோக்கியபடி ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் முனீஸ்வரர் மற்றும் விநாயகர் (தமிழ் சினிமாவில் பஞ்சாயத்து சொல்வதற்குத் தோதான) திண்ணைக் கோவில்களும் முகப்பில் அமைந்திருக்கும் கிராமம்.
தினமும் காலை, மாலை இரு வாகன்ங்கள் நிச்சயமாக வந்து போகும். ஒன்று எஜமான் படத்தில் வரும் ரஜினியை நிஜத்தில் நிறுத்தும் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் நடத்தும் தனியார் பள்ளியில் இருந்து வரும் ஸ்கூல் வேன். மற்றது பால் சொசைட்டியில் பால் எடுக்க வெரும் டெம்போ. மற்றபடி பஸ் பிடிக்க வேண்டுமானால் ஸ்கூல் வேன் கூடவே ஆறு கிலோ மீட்டர் ஓட வேண்டும். இல்லையானால் ஆற்றைத் தாண்டினால் பஸ். அதுதான் வெளி உலகுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் முதன்மையான ரூட்.
 
இருபதுக்கும், முப்பந்தைத்துக்கும் இடையில் பிராயம் கொண்ட ஆட்கள் அரிதாகத் தென்படும் ஊர். ஏகதேசமாக கேரளா கந்துக் கடைக்கும், திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் போய் விட்டார்கள். அமெரிக்கா மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டு ஒருத்தியும், பெங்களூர் சென்னை என சாஃப்ட்வேரை நோக்கி நாலு பேரும், கோயம்புத்தூரில் சலூன் வைப்பதற்கு இரண்டு வாலிபர்களும் போய் விட இரண்டு பேர் தினசரி காலையில் எட்டே முக்கால் பஸ்ஸில் தாராபுரம் போய் சாயங்காலம் ஐந்தரை பஸ்ஸில் திரும்புகிறார்கள். அதில் ஒருவன் கார் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்கிறான். இன்னொருவன் ஆறு வருசமா என்ன செய்யறான்னு யாருக்கும் தெரியாது. ஏதோ கல்யாணம் ஆகும் வரைக்கும் பில்டப் செய்து தீர வேண்டியிருக்கிறது பாவம் அவனுக்கும்.

இப்படியாகப்பட்ட ஊரில் விவசாயத்தின் மீதுள்ள நாட்டம் காரணமாகவும், வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிற தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பிரிய இயலாத்தாலும் ஊரிலேயே இருக்கும் ஒரு இளைஞன் முத்து, நமது நாயகன். கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்தவன்.

வார லீவில் ஊருக்கும் வரும் பழனிச்சாமி பதினைந்து நாளாக திரும்பிப் போகாமல் ஊரைச் சுற்றியபடியே இருக்கிறான். அவன் வேலை பார்த்த திருப்பூர் பனியன் கம்பெனியில் லாங் லீவ் விட்டிருப்பதாகச் சொல்கிறான்.

நேற்று எர்ணாகுளத்தில் இருந்து மணியன் வந்திருந்தான். இவர்களை விட சின்னப் பையன். எட்டாவதுக்கு மேல் படிப்பு ஏறாமல் மலையாள தேசம் போய் கந்துக் கடை விரித்து நன்றாக செட்டில் ஆகி விட்ட பயல்.

மணியன் வந்த்தை ஒட்டி முத்துவின் தென்னந்தோப்பில் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஏற்பாடாகிறது. தோப்பின் நடுவே டிராக்டர். அதன் பின்னே டிரெய்லர். அதனுள்ளே முத்து, பழனிச்சாமி, மணியன் மூவரும் வட்டமாக உட்கார்ந்திருக்க அவர்களுக்கு மத்தியில் சரக்கும், அதற்குக் கடிக்க முறுக்கும், முத்துவின் டிரேக்டரில் எப்போதும் தயாராக இருக்கும் வாட்டர் பாட்டில் + எவர்சில்வர் டம்ளர் கூட்டணியும் உள்ளேன் அய்யா. இளமத்தியான நேரம். மணி 11 ஐ நெருங்குகிறது.

காட்சி 1:
பழனிச்சாமியின் டம்ளர் மட்டும் வேகமாகத் தீர்கிறது.

பழனி: (மணியனை நோக்கி) ஏண்டா இப்பவெல்லாம் அடிக்கடி வர்றது இல்ல?

மணியன்: எங்கண்ணா வர்றது? முந்தி மாதிரின்னா வந்துரலாம். இப்ப குடும்பம் குட்டீனு ஆகிருச்சு. அப்பறம் உங்கலையாட்ட பொச்சுக்கு பொறவாலயா இருக்கறேன்? (கொஞ்சம் இடைவெளி விட்டு) நீங்க வாராவாரம் வந்துருவீங்களாட்ட இருக்குது.

பழனி: இத்தன நாளு அப்படித்தான் வந்தண்டா. இனி முடியாது.

மணியன்: ஏன்னா? வேலை ஜாஸ்தியா? இல்லீன்னா திருப்பூர்ல எதாவது பிகர் செட் பண்ணிட்டீங்களா?

முத்து: (இடைமறித்து) டேய் சும்மா இருடா. அவனே எடஞ்சல்ல இருக்கான். நீ வேற கொடயாதே.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆளுக்கு நாலு மடக்கு குடித்து, புது முறுக்கு பொட்டலத்தையும் உடைக்கிறான் முத்து. அவர்கள் இருக்கும் இட்த்தை நோக்கி ஒருவர் நடந்து வருகிறார். மரமேறும் மூப்பன் அவர். தோளில் தொழிலுக்கான உபகரணமும், முதுகில் கத்தி வைக்கும் பொட்டியும் சூடி வருகிறார். நாற்பதைக் கடந்த வயது. ஐம்பதாக்க் காட்டுகிறது உடலும், முகமும். கயிறு உரசி முதுகு காய்த்திருக்கிறது.

மணியன்: அது நம்ம நல்லான் தான?

பழனி: ஆமாண்டா. பாரு. நேரா வந்து ஏனுங்க இப்படி பண்றீங்கம்பாம்பாரு.

அதே மாதிரி டிரெயிலருக்கு அருகில் வந்த்தும் வராத்துமாம நல்லான் பேசுகிறார்.

நல்லான்: உங்களைல்லா நம்பி எப்புடீங்க ஊருக்குள்ள இருக்கறது? உங்களுக்கே இது நல்லா இருக்குதா? பெரிய மனுசம்பெத்த புள்ளயாட்டவா இருக்குது நீங்க செய்றது?

முத்து: எல்லா நல்லாத்தே இருக்குது. ஏழு மணில இருந்து மரமேறீட்டு வந்து வெறு வயித்துல குடிச்சீன்னா கொடலு வெந்து போயிரும். அப்பறம் உம்பட இஸ்டம்.
காய் போடப் போன தோப்பில் மூன்று இளநீர் குடித்திருந்தார் நல்லான். அதைத் தவிர வேறொன்றும் சாப்பிட்டிருக்க மாட்டார் என்பது முத்துவுக்குத் தெரியும். அந்த ஊரில் அநேகமான கடின வேலைகள் அதிகாலை தொடங்கி பத்து பத்தரைக்குள் முடிந்து விடும். மறுபடி மாலை நாலு மணிக்கு மேல்தான்.

நல்லான்: (பொட்டி, கயிறு எல்லாம் கீழே கழட்டி வைத்து விட்டு டிரெயிலர் டயரில் காலை வைத்து உள்ளே ஏறியபடியே) நீங்கல்லாம் பொறக்கறதுக்கு மிந்தியே கள்ளு கட்டுனவன் நானு. நீங்க என்னமோ சொல்றீங்க. இது கூல் டிரிங்க்ஸாட்ட. இன்னொரு தம்ளாரு எடுத்து வெய்யிங்க.

நல்லான்: கேரளாக்காரரு வந்திருக்காங்க.. அதுனாலதான் எளமத்தியானத்திலயே ஆரம்பிச்சுட்டீங்களா?

மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்க்க, முத்து இன்னொரு டம்ளரை எடுத்து நீட்ட நல்லான் அதில் தானே பிராந்தியை ஊற்றுகிறார். எதையை கலக்காமல் அப்படியே வாயில் வைக்கிறார் நல்லான்.

பழனி: வாட்டர் பாட்டில் இருக்குது நல்லா(ன்). தண்ணி ஊத்தி மிக்ஸ் பண்ணிக்க.

நல்லான்: பாலாக இருந்தாலுந்சரி, பிராந்தியா இருந்தாலுந்சரி தண்ணீர் கலக்கினா ஒடம்புக்கு ஒத்துக்காதுங்க

ஊற்றியதில் பாதியை காலி செய்து விட்டு கீழே வைத்து விட்டு ப்ழனிச்சாமியைப் பார்த்து கேட்கிறார்.

நல்லான்: இன்னி உங்களுக்கு வேலை இல்லீங்க? எதாச்ச்சியும் தறிக்கிறி போட்டுக்குங்க. நெழல்லயே இருந்து பழகீட்டீங்க. காடு தோட்ட்த்துல போய் பாடுபடவா போறீங்க !
(பனியன் கம்பெனியில் வேலை போய் விட்ட்து என்பது மணியனுக்கு இப்போதுதான் தெரிகிறது)

மணியன்: வேல போயிருச்சான்னா? பத்து பன்னண்டு வருச சர்வீஸ். எதோ சூப்பர்வைசருன்னு சொன்னைல்லண்ணா?

பழனி: எல்லா இந்த சாயப்பட்டறை பிரச்சனடா. அதுக்கு முந்தி நல்லாத்தான் இருந்துது. ஏகதேசமா எல்லா யூனிட்டும் மூடிட்டாங்க.

முத்து: ஒதச்சுப்போடுவண்டா. யாருடா பிரச்சின பண்ணுனா? முப்பது வருசமா நொய்யல் ஆத்தையே நாசம் பண்ணீட்டானுக. அப்பவெல்லாம் ஒன்னுந்தெரியல. இப்ப இவனுகளுக்கு லாபம் வல்லீன்னா, வேல போச்சுன்னா மட்டும் வலிக்குது. குத்துது கொடையுதுனுக்கிட்டு. கம்பெனி ஓனர்கள உடுடா. உன்னையாட்ட வேலைக்குப் போன குடியானவனுகள ஒதக்கணும் மொதல்ல.

பழனி: மறுக்கா ஆரம்பிச்சிட்டியாடா? சித்தே கம்முனு இரு. (மணியனை நோக்கி) அப்பறம்டா மணியா.. எல்லா சவுக்கியந்தான?

மணியன்: பரவால்லீண்ணா. எட்டு லைன் போட்டிருக்கேன். இன்னோ 3 லைன் போடலானு ஐடியா பண்ணீட்டு இருக்கேன். பனண்டுருவா (12) ரொட்டேஷன்ல ஓடுது.

முத்து: டேய்.. உங்க உப்புசம் தாங்க முடியலடா சாமி. (கொஞ்சம் இடைவெளி விட்டு) இதெல்லா ஒரு பொழப்பாடா? ஊரு விட்டு ஊரு போய் வட்டிக்கு உட்டு சம்பாரிக்கறதுக்கு பொம்பள புரோக்கர் வேலை பாக்கலாம்.

பழனி: இவன் இப்படித்தான் ஒளறுவான்.. தானும் படுக்காம தள்ளியும்படுக்காம... நீ கண்டுக்காத மணியா. (முத்துவை நோக்கி) நீ இந்த ஊரு பொடக்காலியக் கூட தாண்டாட்டி யாருமே வெளிய போயி பொழைக்க்க்கூடாதாடா?

முத்து: (நக்கலாக) முத்தூட் பினான்ஸ், மணப்புரம் கோல்டுன்னு மலையாளத்தானுக நம்ம ஊர்ல வட்டிக்கு விட்டா இவனுக போய் கேரளாவுல கந்துக் கடை விரிக்கறானுக. என்னைய பொறுத்தவரைக்கும் அது ஒரு கேடுகெட்ட பொழப்பு.

உனக்கு பொறாமைண்ணா என மனதுக்குள் நினைத்தபடி அமைதியாக இருக்கிறான மணியன்.

நல்லான்: ஆளாளுக்கு அவியவிய பொழப்பப் பத்தி பேசுங்க எம்பொழப்ப மறந்துருங்க.  

பழனி:. உடு நல்லா(ன்). நம்ம காட்ல கள்ளு கட்டீரலாம். ஆளுக்கு ரண்டு குடுவை. மிச்சத்த நீ வித்துக்க. ஆனா போலீஸ் வந்துதுனு வெய்யி..

நல்லான்: எங்காட்டுல தெளுவு கட்டச்சொன்னேன். இந்த மூப்பந்தே கள்ளு கட்டி திருட்டுத்தனமா விக்கறான்னு சொல்லீருவீங்க. கவண்டீகள்ளா வெவரமுங்கோ..

முத்து: கள் எறக்கறது, கள்ளச் சாராயம் காச்சறது எல்லாம் சட்ட விரோதம். எது செஞ்சாலும் சட்டப்படி செய்யணும்

நல்லான்: (நடக்கும் விவாத்த்துக்கு சம்மந்தமே இல்லாமல்) ஏனுங்க அங்க பாருங்க மாரியப்பன.. பண்ணையத்துல இருந்தா அவனாட்ட இருக்கணுங்க.. அப்படி ஒரு பண்ணையத்துல சேர்ரதுன்னா நானெல்லா சம்பளமே கேக்க மாட்டனுங்க.

மணியன்: என்னமோ மேட்டர் இருக்குமாட்ட இருக்குது. ஊருக்கு அடிக்கடி வல்லீன்னா நாட்டு நடப்பே தெரிய மாட்டீங்குது.

பழனி: கெழபுறத்து தோட்ட்த்து கந்தசாமி அண்ணன் இருக்கார்ல அவரு துபாய் போனது உனக்கு தெரியும்ல. அவரு பண்ணையத்துல ஆரான்னு ஒரு பள்ளப்பையன் இருக்கான்.

நல்லான்: அகல உளுகறதுக்கு அவிய வெளிநாடு போய்ட்டாங்க. ஆரான் அவிய பண்ணையத்தை ஆழ உளுகறான்னா பாத்துக்குங்க..

மணியன்: பண்ணையத்தை மட்டுந்தேனா? (நக்கலாக)

நாலு பேரும் விவகாரமாக சிரிக்கிறார்கள்.

காட்சி 2:
மாலை 5 மணி. முனீஸ்வரன் கோவில் ஆல மரத்தடியில் ஊரே கூடியிருக்கிறது. இன்னும் பால் சொசைட்டி திறக்கவில்லை.

ஒருவர்: ஏப்பா கருப்பா. நல்லா கேட்டையா. 4 மணீன்னுதான் சொல்லி உட்டாங்களா?

நல்லசாமி என்கிற மூப்பன் நல்லான் ஆனது போல, ஆறுச்சாமி என்கிற பள்ளன் ஆரான் ஆனது போல கருப்புசாமி என்கிற நாவிதன் கருப்பன் ஆனான்.

கருப்பன்: நாலு மணிக்கு வந்துருவோம். ஊர்ல அல்லாரும் இருக்கோணும்னு கண்டிசனா சொல்லி உட்டாங்களுங்க. எசமாங்க சொன்னதத்தான் நான் சொன்னனுங்க. வந்துருவாங்களுங்க.. (கொஞ்சம் பளபளப்பாக இருக்கும் ஒருவரை நோக்கி) ஏனுங்க மச்சூட்டு கவண்டருங்க.. நம்ம கிட்ட எசமாங்க நம்பர் இருக்குமல்லவுங்க. வேணும்னா செல்போன்ல கூப்பிட்டு பாருங்களே.

மச்சு வீட்டுக்காரர்: அட நீ வேற ஏப்பா. அவிய வாரப்ப வரட்டும். நம்மளுக்கு எதுக்கு வம்பு?
(மிராசுதார், ஜமீன்தார் வழக்குகள் நாடெங்கும் ஒழிந்தாலும் கொங்குநாட்டில் குடியானவர்கள் முதல் கூலிக்கார்ர்கள் வரை அனைவரும் பயந்து மரியாதையோடு தொழும் பட்டக்கார்ர்கள் எல்லது எஜமான்கள் இன்னும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். சேரர் காலத்தில் கொங்கு நாடு 24 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் ஒரு பட்டக்காரர் நிர்வகித்த்தாகச் சொல்லப்படும் பிளாஸ்பேக் இந்த எபிசோடின் இரண்டாவது காட்சிக்கு முக்கியமானது)

ஒரு குடியானவர்: (மெதுவாக பக்கத்தில் இருப்பவரிடம்) மாடு பாதி வயித்தோடு இழுத்துக் கட்டீட்டு வந்துட்டேன். இன்னஞ்சித்த மேச்சிட்டு வந்திருக்கலாம்.

பக்கத்தில் இருப்பவர்: நீங்க வேற மாப்ள. நான் மூனரைக்கே பால் பீச்சீ பாலும் வல்ல ஒன்னும் வல்ல. கண்ணுக்குட்டிய அவுத்து உட்டுட்டு வந்துட்டேன்.

இந்த சமயத்தில் பொலீரோ, பஜீரோ, இன்னோவா என ஐந்தாறு வண்டிகள் வந்து நிற்கின்றன. அதில் ஒன்றிலிருந்து பட்டக்கார்ர் இறங்க மற்றதில் இருந்து ஆளுங்கட்சி வேட்பாளரும், அவரது அடிபொடிகளும் சற்று பவ்யமாகவே பின் தொடர்கிறார்கள். பட்டக்காரரைப் பார்த்து ஊர் மக்கள் அனைவரும் கையெடுத்து கும்பிடுகிறார்கள். அறுபது வயதுக்கு மேலான குடியானவக் கவுண்டர்கள் ஜப்பானிய சண்டைக்காரர்கள் போல இடுப்புக்கு மேல் முன்னால் குனிந்து கையை முன்னால் நீட்டி கும்பிடுகிறார்கள். மனிதனின் முதுகெலும்பு வயோதிகத்தில் அதிகபட்சமாக எவ்வளவு தூரம் முன்னோக்கி வளையும் என்பதை அங்கே அறிய முடிந்த்து. Old habits die hard for them. கர்வத்தோடு தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவர்கள் அணுகும் முறைக்கும், இப்போது அவர்கள் நடந்துகொள்வதற்கும் துளியும் தொடர்பில்லை.

பட்டக்கார்ர்: என்னப்பா எல்லாம் வந்துட்டீங்களா?

கும்பலாக பேசுகிறார்கள்.
வயதானவர் 1; சாமி நம்மூருக்கு வெகு நாளக்கப்பறம் வந்துருக்கறீங்க. நாங்க இவத்தாளையே இருந்துக்கிட்டு வராம இருப்பமுங்களா?

வாழைப்பழ சீப்பு, வெற்றிலை தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு என வைக்கப்பட்டிருக்கும் பெரிய தட்டை ஒன்னொரு பெரியவர் பவ்யமாக நீட்டுகிறார். பட்டக்காரர் அதை வாங்கி பக்கத்தில் நிற்கும் தன் சமையல்கார பண்டாரத்திடம் நீட்டுகிறார். அதன் பிறகு பேச ஆரம்பிக்கிறார்.

பட்டக்காரர்: இவரு ரத்தினம். ஆளுங்கச்சில எம்.எல்.ஏ எலக்சன்ல நிக்கறாரு. அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்சரணும்.

வயதானவர் 1: நீஙக் என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யறமுங்க சாமி.

பட்டக்காரர்: அப்பறம் உங்களுக்கு எதாச்சும் கோரிக்கை இருந்தா சொல்லுங்க. இவரு நெறவேத்தி வெப்பாரு.

ஒரு பெண்: தண்ணி டேங்க் இருக்குதுங்க. நல்ல மொறையா வேலை செய்யறது இல்லீங்க. பாதி நாள் தண்ணி வாரதே இல்லீங்க.. பாத்து செஞ்சு குடுக்கச் சொல்லுங்க சாமி

வேட்பாளர்: ஆட்சிக்கு வந்த உடனே பாக்கறேங்கம்மா

பட்டக்கார்ர்: அடையாளந்தெரியல.. (மேக்காலக்காட்டு குமாரமி மருமக என்று கூட்டத்தில் சொல்கிறார்கள்) ஓ.. நீயா.. ஏம்மா. இதெல்லாமா எம்.எல்.ஏ பாப்பாரு? ஆத்தோரமா இருக்கற ஊரு. நாம போயி தண்ணி ஒரு பிரச்சினைனு பேசிக்கிட்டு. நீங்களே ஒரு ஆள ஏற்பாடு பண்ணி டேங்க சுத்தம் பண்றது மோட்டார் போட்டு உடறது பாத்துக்கணும், சரியா?

அந்தப் பெண்: சேரிங்க.

முத்து: ஆத்துல மணல் எடுக்கறத தடுக்கணும்ங்க. எல்லா மண்ணையும் அள்ளீர்ராங்க. வேடையில தண்ணியே நிக்க மாட்டீங்குது. மிந்தியெல்லாம் ஊத்து பறிச்சா ரண்டு மூனு மாசம் தாங்கும், இப்ப வெறும் பாறைதான் இருக்குதுங்க. நீங்க எம்.எல்.ஏ ஆனா என்ன நடவடிக்கை எடுப்பீங்க?

வேட்பாளர்: எங்க தலைவர் சொல்றதையே நானும் சொல்றேன். சட்டவிரோதமா மணல் அள்றத தடுப்போம். மணல் கொள்ளையர்களை தண்டிப்போம்.

முத்து: சட்ட வீரோதமா அள்றது சரிங்க.. சட்டப்படி அரசாங்கமே அள்ளுதே.

வேட்பாளர்: மணல் மாஃபியாவை வேற எப்படி தம்பி தடுப்பீங்க?

முத்து: ஏங்க மணல் அள்றது தப்பு. அதனால நிலத்தடி நீர் மட்டம் குறையுது. கோடை காலத்துல கெணறு எல்லாம் முன்னை மாதிரி இல்லாம வத்திப் போகுது. ஆத்துல தண்ணி ஓடற ஆறு மாசம் சரி. அப்பறம் அப்படியே மொட்ட மண்டையாட்ட காஞ்சு போகுது. ஒரே பாறைதான் இருக்குது. எப்படீங்க தண்ணி தேங்கும்?

வேட்பாளர்: தம்பி.. ஒன்னு புரிஞ்சுக்குங்க. நம்ம தொகுதில யாரும் மணல் அள்ளாம இருக்க நான் கேரண்டி. கரூர் பக்கத்துல அள்ளுனா அது நம்ம கட்டுப்பாட்டுல வராது.

முத்து: (கொஞ்சம் மிரட்டலான தொனியில்) உங்க தலைவர் கிட்ட சொல்லி அமராவதி ஆத்துல மணல் அள்ளவே கூடாதுன்னு சொல்லுவீங்களா? அப்படீன்னா சொல்லுங்க ஓட்டுப் போடறோம். இல்ல அதெல்லாம் முடியாது அது நம்ம கட்டுப்பாட்டுல இல்லைன்னு சொன்னீங்கன்னா எங்க ஊர்க்காரங்க எல்லாம் மெட்ராஸ் வந்து உங்க வீட்டு முன்னால் உக்காந்துக்கிட்டு உங்க கை கால் எல்லாம் கட்டிப் போட்டு உங்க பேர்ல அறிக்கை விட்டுருவோம்.

பட்டக்காரரின் முகம் மாறுகிறது. கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.

வேட்பாளர்: என்னன்னுப்பா?

முத்து: இனிமேல் தமிழகமெங்கும் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தவிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் மணல் அள்ளி தமிழ்நாடு மற்றும் கேராள முழுவது சப்ளை செய்ய சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வருவேன் அபடீன்னு.

பட்டக்காரர் அதற்கு மேல் நிற்க விரும்பவில்லை.

பட்டக்காரர்: அதெல்லாம் செய்வாரு. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைங்க.
(எல்லோரையும் கும்பிட்டு விட்டு கிளம்புகிறார். பின்னாலேயே வேட்பாளரும் கிளம்ப, நல்லான் சத்தமாக குரல் கொடுக்கிறார்)

நல்லான்: ஏனுங்க. அப்படியே இன்னொரு வேண்டுதலைங்க. கள் எறக்க எதாவது ஏற்பாடு செஞ்சு குடுப்பீங்களா?

வேட்பாளர்: சட்ட விரோதமாக கள் எறக்க, சாராயம் காச்ச அனுமதி கெடைக்காதுன்னு நினைக்கிறேன்.. (என்றபடியே நடக்கிறார்)

நல்லான்: (தனக்குத்தானே) மணல் அள்றது சட்டப்படி செய்யலாம், டாஸ்மாக் சட்டப்படி விக்கலாம். அவனவன் செஞ்சா தப்பு அரசாங்கம் செஞ்சா சரி. இனிமே அவனவன் பொண்டாட்டிய அவனே இது பண்ணா கூட சட்ட விரோதம் அரசாங்கம் பண்ணாதான் சட்டப்படி சரின்னு சொல்லுவாங்களாட்ட இருக்குது.

காட்சி 3:

முத்துவும், நல்லானும் ஒரு மாலை நேரத்தில் ஆற்றோரமாக நடந்து போகிறார்கள். நாணல் புதரில் இருந்து பரிமளா போகிறாள். வயது முப்பந்தைந்தில் இருந்து நாற்பதுக்குள் இருக்கும். துபாய்க்கார கந்தசாமியின் பொண்டாட்டி. முந்தானையை சரி செய்தபடி போகிறாள். முகத்தில் ஒரு வித திருப்தியோடு நடை போடுகிறாள்.

அவள் போன ஓரிரு நிமிட்த்தில் புதரில் இருந்து வெளியே லுங்கியை சரிசெய்தபடி ஆரான் வருகிறான். நல்லானையும், முத்துவையும் பார்த்து விடுகிறான். ஒரு கணம் செய்வதறியாது திகைத்தவன் இயல்பு நிலைக்கு உடனே வந்து விடுகிறான்.

நல்லான்: டேய் ஆரா. என்னடா பண்றீங்க ரண்டு பேரும்?

முத்து: இத்தன நாள் கேட்டதுக்கு பூனை பிய்ய மூடி வெச்ச மாதிரி மழுப்பிக்கிட்டே இருந்தே. இன்னைக்கு மாட்டினியா!

சுமார் 25 வயதுள்ள ஆறுச்சாமி லேசாக வெட்கப்படுகிறான்.

நல்லான்: ஏண்டா.. நீ என்ன சனம்?. அவிய என்ன சாதி?. இப்படி மொற தவறி .. வெளில தெரிஞ்சா நல்லாவாடா இருக்கும்?

ஆரான்: அப்ப ஒரே சாதில இப்படி நடக்கலாமுங்களா?

நல்லான்: இருந்தாலும் உம்பட வயசென்ன அவிய வயசென்ன? நீ கல்யாணம் ஆகாதவன்.. அவிய குடும்ப பொம்பள..

ஆரான்: ஏனுங்க பண்றதுன்னா ஆனதுக்கப்பறம் மொறதவறி பண்றது வேற மொறையோட தாலி கட்டி பண்றது வேற.. போங்க நீங்க..

இருவரும் முறைக்கிறார்கள்.
**********

Sunday, November 8, 2009

பீளமேடு - பழைய நினைவுகள் ( மீள்ப‌திவு )

(செல்வ‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய இடுகையை இங்கே அவ‌ரின் அனும‌தியுட‌ன் இட்டுள்ளேன்.ப‌ழைய‌ நினைவுகளை அசை போடும்பொழுது அதுவும் ஒரு சுக‌ம் தான்.)

*****************************************************************************

கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பீளமேடு தான்.எனக்கு மட்டுமல்ல கோவையில் உள்ள பலருக்கும் பீளமேடு என்றாலே தனிபாசத்துடன் உருகுவார்கள்.ஏன் என்றால் கோவையின் பெரும்பாலான தனியார் கல்லூரிகள்,ஸ்கூல்கள் பீளமேட்டில் தான் இருக்கின்றன என்பதால் கோவைகாரர்கள் பலரும் இங்கேதான் படித்து,தங்கி,இங்குள்ள மெஸ்களில் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். அதனால் பலருக்கும் மறக்க முடியாத ஊர் பீளமேடு என்றால் அது மிகையல்ல.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் 10 மணிவரை செல்லும் பீளமேடு பஸ்களில் இடம் கிடைப்பது சிவாஜி படத்துக்கு டிக்கட் கிடைப்பதை விட மிக கடினமான காரியம்.அத்தனை கூட்டம் பஸ்களில் இருக்கும்.அத்தனையும் மாணவ மாணவியர் கூட்டம்.காந்திபுரம் டூ ஓப்காலேஜ் போகும் பஸ்கள் வழியெங்கும் நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் ஏதாவது கல்வி நிலையம் இருக்கும்.அப்படி ஒரு பஸ்ஸீல் ஏறிக்கொள்வோம்.ஓப்ஸ் காலேஜுக்கு டிக்கட் வாங்கிக்கொள்வோம்.
பஸ் முதலில் நிற்பது மகளிர் பாலிடெக்னிக் ஸ்டாப்பில்.இது கோவையின் தொன்மையான பாலிடெக்னிக். பாப்பநாயக்கன் பாளையம் ஊர் இங்கே துவங்குகிறது என்று சொல்லலாம்.பஸ் அடுத்து நிற்பது மணி ஸ்கூல் ஸ்டாப்பிங்கில்.மணி ஸ்கூல் கோவையின் மிக புகழ் பெற்ற நிறுவனம்.அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இது.இதன் எதிரே குப்புசாமி நாயுடு ஆஸ்பத்திரி உள்ளது.லட்சுமி மில் நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இரு நிறுவனங்களும் மிக புகழ் பெற்ற நிறூவனங்கள்.திரையுலகை கலக்கி வந்த பாக்கியராஜ் மணிஸ்கூல் மாணவர்தான்.பாப்ப நாயக்கன் பாளையத்தில் பிறந்தவர்.மணிஸ்கூலில் பாக்கியராஜ் அடித்த லூட்டிகளை அந்த ஆசிரியர்கள் கதை கதையாய் சொல்வார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் லட்சுமி மில்ஸ்.கோவையின் மிகப்பெரும் மில் இது.ஆயிரக்கணகான தொழிலாளர் பணிபுரியும் நிறுவனம் இது.இப்போது சற்று நலிந்த நிலையில் இருந்தாலும் பிக்-அப் செய்துவிட்டது என்கிறார்கள்.லட்சுமி மில் ஸ்டாப்பிங்கில் தான் புகழ் பெற்ற பீளமேடு துவங்குகிறது.

அடுத்த ஸ்டாப்பிங் நவ இந்தியா. நவ இந்தியா எனும் பத்திரிக்கை அந்த காலத்தில் சக்கை போடு போட்டதாம்.ஆனால் இப்ப அந்த நினைவாக பீளமேட்டுகாரர்களுக்கு இருப்பது நவ இந்தியா பஸ் ஸ்டாப்தான்.நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எஸ்.என்.ஆர் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆகியவை இருக்கும்.

எஸ்.என்.ஆர் கல்லூரி நிர்வாகத்தினர் கோவையில் புகழ் பெற்ற ராமகிருஷ்ணா மருத்துவமனையை நடத்தி வருகிறார்கள்.கோவையின் புகழ் பெற்ற தனியார் கல்லூரிகளில் இது ஒன்று.இந்துஸ்தான் கல்லூரி புதிது என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு 17 நடிகைகளை கல்லூரிக்கு கூட்டி வந்து கோவையையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்.

அடுத்த ஸ்டாப்பிங் எஸ்ஸோபங்க். இங்கே பீளமேடு சாந்தி தியெட்டர் இருக்கும்.சி வகை திரையரங்கு என்பதைதவிர வேறு சிறப்பு ஏதும் இல்லை.

அடுத்த ஸ்டாப் தான் பீளமேடு மெயின் ஸ்டாப்.இதை ராதாகிருஷ்ணா மில் ஸ்டாப் என்றும் அழைப்பார்கள்.இங்கே கோவையின் புகழ் பெற்ற கல்லூரிகளான பி.எஸ்.ஜி பாலிடெக்னிக், பி.எஸ்.ஜி எஞினியரிங்,ஆகியவை உண்டு.பி.எஸ்.ஜிக்கு எதிரே என்.எம்.பி பாக்கரியில் மாணவர் கூட்டம் அலைமோதும்.(பத்து வருடத்துக்கு முந்தியே இங்கே பர்கர் பாணியில் ஒரு ஐட்டம் செய்து அசத்தினார்கள்.)பப்ஸ்,கேக்,டீ ஆகியவை இங்கே புகழ் பெற்ற ஐட்டம்கள்.

கோவையின் புகழ் பெற்ற பழமுதிர் நிலையம் இங்கே உண்டு.அனைத்துவகை கனிகளும்,பழசாறும்,காய்கனிகளும் இங்கே கிடைக்கும்.இந்த ஸ்டாப்பிங்கில் சூப்பரான மெஸ்கள் பல உண்டு.

பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் காண்டினுள் நுழைந்தால் ஓட்டல்களுடன் போட்டி போடும் வெரைடீயில் உணவுகள் கிடைக்கும்.அன்னபூர்ணா மாடலில் சாம்பாரில் மிதக்கும் இட்லி இங்கே ஃபேமஸ்.பாலிடெக்னிக்குக்கு எதிரே இருக்கும் பி.எஸ்.ஜி மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் கோவையின் புகழ் பெற்ற பிசினஸ் பள்ளியாகும்.அமிர்தா மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடூய்ட் வரும்வரை பி.எஸ்.ஜி தான் கோவையின் நம்பர் ஒன் பிசினஸ் ஸ்கூலாக இருந்தது.

இதே ஸ்டாப்பிங்கில் இருக்கும் சர்வஜன மேல்நிலைப்பள்ளிக்கு மகாத்மா காந்தி ஒருதரம் வருகை புரிந்திருக்கிறார்.அவர் விருந்தினர் வருகை கையேட்டில் கையெழுத்திட்ட குறிப்பு இன்னமும் அந்த பள்ளி நிர்வாகத்தினரால் பாதுகாக்கப்படுகிறது.பீளமேடு மெயின் பஸ்ஸ்டாப்பிலேயே நின்று விட்டால் எப்படி?தொடர்ந்து போவோம்.அடுத்த ஸ்டாப்பிங் கிருஷ்ண்ணம்மாள் கல்லூரி.இங்கே கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளியும், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் உள்ளன.கோவை நகர இளவட்டங்கள் மாலை நேரமானால் இந்த பக்கம் தான் வட்டமடிப்பார்கள்.ஆனால் கல்லூரி காம்பவுண்டிலேயே போலிஸ் ஸ்டேஷன் இருப்பதால் அடக்கித்தான் வாசிப்பார்கள்:).இந்த நிறுவனமும் பி.எஸ்.ஜி க்ரூப்பை சேர்ந்ததுதான்.இதற்கு அருகில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இருக்கும்.கோவையின் மிகபெரிய மருத்துவமனை இது.

கிருஷ்ணம்மாள் ஸ்டாப்பிங்கை தாண்டினால் பீளமேட்டின் மெயின் ஏரியா முடிந்துவிடும்.அடுத்து ஓப்ஸ் காலேஜ் என்ற பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அங்கே கோவை மருத்துவ கல்லூரி,அரசினர் ஆண்கள் பாலிடெக்னிக்,பி.எஸ்.ஜி கலைகல்லூரி, சி.ஐ.டி எஞினியரிங் கல்லூரி, ஜி.ஆர்.டி கல்லூரி, ஜி.ஆர்.ஜி ஸ்கூல், கே.எம்.சி எச் மருத்துவமனை,அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இருக்கும். அதுபோக கோவை விமான நிலையம் இருப்பதும் இங்குதான்.

பீளமேடு கல்வியுடன் ஆன்மிகத்தையும் அளிக்கும் ஊர்.இங்கே அகிலாண்டீஸ்வரி அம்மன் கோயில்,பிளேக் மாரியம்மன் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் பக்தர் கூட்டம் அலைமோதும்.

ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும்,கல்லூரிகளும்,மில்களும் நிரம்பிய இடமாக பீளமேடு இருப்பதால் இங்கே கூட்டம் அலைமோதும்.மெயின்ரோட்டை விட்டு ஊருக்குள் போனால் ஏகப்பட்ட கிரைண்டர் தொழிற்சாலைகள், பவுண்டரிகள் ஆகியவை இருக்கும்.இங்கே ஏராளமான தொழிலாளர் வேலை பார்ப்பார்கள்.பீளமேடு சிறக்க காரணமே இந்த சிறுதொழில்கள் தான்.இவைதான் கோவையின் மூலதனமே.ஆம் சுயதொழில் செய்து தாமும் முன்னேறி நாட்டையும் முன்னேற்றும் துடிப்பான உழைப்பாளிகள் நிரம்பிய இடமே பீளமேடு.

Tuesday, July 14, 2009

ஐந்து நாள் அனுபவங்கள்.

க்டோபர் 7, 2K8-ல் எழுதியது.

***

*புதன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன்.

* லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன்.

ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது.

ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ்டர்கள், மஞ்சள் தூள் வாசனை, வீரப்பன் சத்திரம் பாரதி தியேட்டர், பார்க்கின் நடுவில் தேர் வடிவ ட்ராஃபிக் காவலரின் கையசைத்தல்களில் நகரும் நகரின் இயக்கம், கூட்டம் அப்பும் ஷாப்பிங் சந்துகள், கட்டில் கடை ஷர்ட்கள், கவிழ்த்த குடையில் பனியன், ஜட்டிகள், செயற்கை மலையில் கீழிருந்து மேலேறும் ரொட்டேஷனல் அருவிகள், பெரிய மாரியம்மன், கஸ்தூரிநாதர் கோயில்கள், எதிரெதிர் முகம் காட்டும் செங்குந்தர், கலைமகள் பள்ளிகள், கோவை ரூட்டை ஒற்றை விரலில் காட்டும் தங்க முலாம் எம்.ஜி.ஆர்.... பெரியாரின் ஊர் வளர்ந்து கொண்டிருக்கிறது,வேகமாக!

* ஃபேக்டரிகள் இருப்பதால் காற்றில் கெமிக்கல் நாற்றம் விளாசும் பி.பி.அக்ரஹாரம் ரம்ஜான் கொண்டாட்டங்களில் இருந்தது. பி.பி. என்றால் பிராமண பெரிய என்ற விளக்கம். அக்ரஹாரத்தில் எப்படி இஸ்லாம் மக்களின் குடியிருப்பு என்பது எப்போதும் அந்த வழியில் பயணிக்கையில் எழும் கேள்வி. அம்மக்களிடையே எக்குழப்பமும் இல்லை. மசூதியும் உண்டு; மாரியம்மன் கோயிலும் உண்டு. எல்லோர்க்கும் பொதுவாக மாமிசக் கடைகளும் உள்ளன.

* காவிரியிலும், பவானியிலும், காளிங்கராயன் வாய்க்காலிலும் நிரம்பி நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பேரேஜில் வடிகட்டப்படுவதால் காவிரி சுத்தமாக ஓடிக் கொண்டிருக்க, பவானி ஆகாயத் தாமரைகளின் ஆக்ரமிப்பில் திணறுகிறது.

*வியாழக்கிழமை கூடுதுறைக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். சங்கமப் பகுதியில் கூட்டம். செவ்வாய் தோஷப் பரிகாரங்கள் நிறைய நடந்து கொண்டிருந்தன. கம்பிகளால் பாதுகாப்பிற்கு விடப்பட்டிருந்த பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீராடிக் கொண்டனர். ஆற்றில் நீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்ததால், படிக்கட்டுகள் கொஞ்சம் மூழ்கி, பச்சையாகி இருந்தன. விடுமுறை என்பதால் சிறுவர்கள் கூட்டம் நிறைய இருந்தது. கன்னடம், இந்தி, தெலுங்குகளில் டூரிஸ்டுகள் வந்திறங்கி இருந்ததால் பல குரல்கள் கேட்டன.

பரிகாரப் பகுதியில் உன்னிப்பாகக் கேட்டதில், கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, தபதி பெயர்களெல்லாம் காவிரிக் கரையில் சொல்லப்படுகின்றன. மந்திரம் சொன்னவர்கள் அந்த நதிகளை எல்லாம் ஒருமுறையாவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே! இந்த நாடு மீண்டும் சமஸ்தானங்களாய்ப் பிரியாமல் ஒன்று படுத்தும் பல முக்கியமான பந்தங்களில் நமது பாரம்பரியம் ஒன்று என்பது மீண்டும் மீண்டும் உறுதியானது. திருவல்லம் பரிகாரத் தலத்திலும் இதே நதிகள் பெயர் சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது.

வேதநாயகி அம்மன் கோயிலின் தூண்களில் சில உன்னத சிற்பங்கள் இருப்பதை, கால் நூற்றாண்டு வாழ்வில் இப்போது தான் காண்கிறேன். சில ::

* மதியம் கொஞ்சம் வெயில் தணிந்த பின் படித்த பள்ளிக்கு ஒரு பயணம் சென்றோம். கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகள் கழித்து!

எத்தனை அனுபவங்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை கனவுகள்! எத்தனை கற்பனைகள்! எத்தனை எத்தனை நிகழ்வுகள்! மழை பெய்ததும் பதுங்கலில் இருந்து எட்டிப் பார்க்கும் வர்ணம் மாறும் பச்சோந்தியாய் மனக் கடலில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் அலையடித்தன. நிழல் மேடையில் உருவங்கள் நடமாடின. பிய்த்தெறிந்த காலத்தின் பெருங்கரத்தில் இருந்து விடுபட்டு வேக வேகமாய் வயது குறைந்து போனது.

சிறு வயதில் கண்ட அன்னைக்கும், இப்போது காணும் அன்னைக்கும் உருவ வித்தியாசங்கள் இருப்பினும் அவரது அன்பில் மாறுதல் இருப்பதுண்டோ?

புதுக் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. எல்லைகள் விஸ்தாரிக்கப்பட்டிருந்தன. சில வகுப்புகள் முகம் மாறி இருந்தன. சில கட்டிடங்கள் காணாமல் போயிருந்தன. கடவுளே!!!

ஈர மண் பறித்து விதைத்து வைத்து, கம்பி வேலிக்குள் காத்து வைத்திருந்த வேப்பஞ் செடிகள் மட்டுமே இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நம்மைச் சுகமாய்த் தாலாட்டுகையில், கண்களில் வந்ததோ இல்லையோ, நெஞ்சினில் கண்ணீர் கசிந்திறங்கியது.

த.ஆசிரியராகி விட்டிருந்த கணித ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மட்டும் அந்த விடுமுறை நாளிலும் வந்திருந்து பள்ளி குறித்த அவரது ஆசைகளைப் பகிர்ந்து கொண்டார்.* பள்ளியில் இருந்து கிளம்பி அத்தாணி சென்று, அங்கிருந்து கோபி சென்று கிழக்காகத் திரும்பி ஈரோடு செல்லும் வழியில் வந்து கவுந்தப்பாடி வழியாக, காளிங்கராயன்பாளையத்தைக் கடந்து நகருக்குள் நுழைவதாகத் திட்டம்.

அருமையான வயல்கள். விதவிதமான பச்சை நிறங்கள். இளம் பச்சை, நிமிர்ந்த பச்சை, முதிர்ந்த பச்சை என! பின்புலமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் லேயர் லேயராக ஒன்றுக்குள் ஒன்றாக விழுந்து படர்ந்திருந்தன. வாய்க்கால்களில் நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. மஞ்சள் வெயில் கதிர்கள் அடிவானெங்கும் சிவக்கப் படுத்தி இருந்தது.

மனம் முழுதும் ஒரு பாடல் தனக்குத் தானே ஒலிபரப்பி எதிரொலித்துக் கொண்டே வந்தது. வெகு காலங்களுக்கு முன்னால் இவ்வழியே ஒரு நாளின் மீ அதிகாலையில் சென்ற போது பதிந்த பாடல் அது!

'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு!
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு!
என் கண்ணோடு!'

வளைந்து வளைந்து செல்லும் தார்ச் சாலைகள். அவ்வப்போது எதிர்ப்படும் கிராமங்கள். பழைய ரஜினி, விஜயகாந்த ரசிகர் மன்ற போர்டுகள்.

பாரியூர் தாண்டியவுடன் ரிஸர்வில் விழுந்த வண்டியை 60. கி.மீ. வேகத்துக்கு முறுக்கியதில், கோபியை நெருங்கும் போது ஒரு பங்க் வரை ஓட்டி வந்து விட்டோம்.* வெள்ளிக் கிழமை காலையில் ஈரோடு சென்று திருச்செங்கோடு வழியாக ராசிபுரம், சேலம் செல்லும் பேருந்தில் ஏறி மல்லசமுத்திரம் செல்வதாக ப்ளான்.

பொன்னி நதி பிரிக்கின்ற கொங்கு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளின் நில, வாழ்வு முறை, வெயில் வேறுபாடுகள் தெள்ளெனத் தெரிகின்றன.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சத்தி, கோபி, பவானி, ஈரோடு, கரூர் என்பன ஒரு குழு. காவேரி, பவானி, நொய்யல், சிறுவாணி, அமராவதி நதிகள் பாயும் வளப் பிரதேசம். மேற்கு மலைத் தொடர்கள் எல்லைகளாக இருப்பதால், காற்றில் குளிர் கரைந்திருக்கும். நெல், மஞ்சள், கரும்பு, பருத்தி, தென்னை வயற் பயிர்கள். மேட்டூர், பவானிசாகர் அணைக்கட்டுகள்.

சேலம், நாமக்கல், சங்ககிரி, ராசிபுரம், திருச்செங்கோடு, வீரபாண்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி வரை மற்றொரு குழு. அனலடிக்கும் வெயில். மேட்டூர் அணையில் இருந்து வரும் காவேரி நீர் மட்டுமே நீராதாரம். இன்றேல், நிலத்தடி நீர். விவசாயத்தை விடவும் விசைத்தறிகள், கைத்தறிகள் அதிகமான தொழில் வாய்ப்புகள். காற்றில் எப்போதும் ஒரு பஞ்சு வாசம். வறண்ட மொட்டை சிமெண்ட் மலைகள்.

பேச்சுத் தமிழிலும் எளிதாக வேறுபாடுகளைக் கண்டு கொள்ளலாம்.* எங்கள் பகுதியில் காலை 9 முதல் 12 மணி வரை முதல் ஸ்லாட். அலுவலக நேரத்தில் அரை நாள் காலி! பின் மாலை 6 டு 7. கடைசி ஸ்லாட் நள்ளிரவு 1 முதல் 2 வரை!

இது தீபாவளிக் காலமாம்! பொட்டுத் துளி மழை வரவில்லை. பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை. இதுவா மழைக்காலம்? தமிழகத்தில் வெயில்காலம், குளிர்காலம், மழைக்காலம், வசந்தகாலம் எல்லாம் மாறிப் போய் ஒரே கொளுத்தும் அனல் பொழுதுகள் மட்டுமே அவதரித்துள்ளன.

இருள் வந்து கவ்விய பின் பிறை நிலா நில்லாது உருண்டு ஓடிக் கொண்டிருந்தது. தொப்பியைப் போல் கருப்பு எங்கும் கவிழ்த்திருந்தது.* தீராக் கொசு ரீங்காரத்திலும், நசநசக்கும் வேர்வையிலும், கரும்புகை கொப்புளிக்கும் சீமெண்ணெய் சீசா விளக்கின் நுனி நடனமிடும் நெருப்பின் ஒளியில், இரட்டை வரித் தாட்களில், அ, ஆ, இ, ஈ எழுதும் குட்டிச் சிறுமி, அந்த விளக்கைப் போல் எதிர்காலத்தின் மேல் ஒரு ஒளியைப் பாய்ச்சுகிறாள்.

பண்ணாரிக்குப் போனேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (Feb 22, 2K9) அதிகாலை 10:30 மணிக்கு பாலாஜி வந்தான். 'இன்னும் ரெடியாகலியா..?' என்று கேட்டபடியே படுக்கையில் விழுந்தான். அவன் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் துவங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனவே பிறகே குளிக்கச் சென்று, குளித்து விட்டு, எல்லா துணிகளும் நீரோடு செம்புலப் பெயலாக கலந்து விட்டபடியால் ஒரு பழைய டீ ஷர்ட்டை அணிந்து கொண்டேன். சொல்லப்போனால், இன்னும் முன்னதாக எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் போட்டிருந்த ப்ளான் அப்படி..!

பவானியில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் அப்படியே கொஞ்சம் தெற்காகப் போய், தே.நெ.47-ஐக் கைப்பற்றி கோவை பாதையில் சென்று சித்தோட்டில் முற்றிலுமாக மேற்காகத் திரும்பி, கவுந்தப்பாடி தாண்டி, கோபியைக் கடந்து, குன்னத்தூர் வழியாக சத்திக்குள் நுழைந்து, தொலைத்து, கோயமுத்தூரில் இருந்து தாளவாடி, சாம்ராஜ்நகர், மைசூர் செல்லும் சாலையில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று, திரும்பும் வழியில், சத்தி, கள்ளிப்பட்டி, அத்தாணி, அந்தியூர் ரூட்டில் மீண்டும் பவானியை அடைவது!

அங்கங்கே கொஞ்சம் எலி கறண்டிய ஒரு முழு வட்டப் பயணம்.

சொன்னவுடனே பாலாஜி சுத்தமாக மறுத்தான். "நம்ம வண்டில காலையில ஆரம்பிச்சமுன்னா நீ சொன்ன ரூட்ல போய்ட்டு வந்தா, திங்கள் மதியம் வந்து சேரலாம்..." என்றான். எனவே திட்டம் திருத்தப்பட்டு நேர்க்கோட்டிலேயே போய் வருவது என்று ஒல்லியாக்கப்பட்டது.

அவன் மாமா ஞாயிற்றுக் கிழமை வெளியே கிளம்பினால் மட்டுமே வண்டியை ஜூட் விட்டு வரமுடியும். அன்றைக்குப் பார்த்து அவர் 11 மணிக்குத் தான் கிளம்பினார். எனவே நேரம் ரெண்டு மணிநேரம் ஷிஃப்ட் அடிக்க வேண்டியதாகப் போனது.

11:30 மணிக்கு இருவரும் டாடா காட்டி விட்டு, டி.வி.எஸ்.50-ஐக் கிளப்பினோம்.

'தி மோட்டர்சைக்கிள் டைரீஸ்' பார்த்து ஏற்கனவே ஊற்சுற்றியான எனக்கு இன்னும் கால்கள் கள் அடித்தது போல் சுற்ற ஆசை ஏறி விட்டுருந்தது. கொஞ்சம் அது போல் அனுபவங்களும் ஏற்பட்டன.

'முள்'ளென்று வெயில் அடித்தது. முதலில் வண்டியின் கண்டிஷன் அறுபது கி.மீ தாங்குமா என்று பார்த்துக் கொண்டோம். பவானியின் மேற்கு எல்லையில் இருக்கும் முனியப்பன் கோயில் அருகே இருக்கும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க, டாங்க் தளும்பியது. தாங்கும் என்று ஸ்திரமானோம். ஏர் செக் வேறு எங்காவது போய் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

காடையம்பட்டி, திப்பிசெட்டிபாளையம், சின்னமோளபாளையம் ரோடுகளில் பெயர்ந்திருந்த திட்டுக்களில் குதித்து, கண்ட்ரோல் பண்ணி, சில டி.டி.எஸ்-களை, பல்ஸர்களைக் கடந்தோம். கைப்பிடி கடைசி ம்றுக்கில் இருந்தது. இதற்கு மேல் திருப்ப முடியாத நிலையில் பறந்தது. இருவர் கையில் ஒரு நாரையோடு ஹோண்டாவில் 'ஹோ'வென போய்க் கொண்டிருக்க, அதன் கண்களில் கொஞ்சம் பயம் ஒளிந்திருந்தது.

ஜம்பையைத் தாண்டி ஒரு குறுகலான மோரி வரும். 'மோரி' என்றால் சிற்றோடைகளைக் கடக்கும் குறும்பாலம். பெரிய மோளபாளையம் தாண்டி தளவாய்பேட்டை வரை ஸ்டாப்பிங்கே கிடையாது. சும்மா 'சல்'என செல்...!!!

தளவை தாண்டி பள்ளியில் படிக்கும் போது பச்சையாய்க் கண்டிருந்த கரும்பு வயல்கள் நிரவப்பட்டு, வரிசையாக அளவுகளோடு கற்கள் பதிக்கப்பட்டு, இரு குச்சிகள் தோள் கொடுக்க வெடவெட போர்டு ஒன்று ஏதோ ஒரு நகர் வரப்போவதாகக் கட்டியம் கூறிக் காற்றில் ஆடியது.

ஒரிச்சேரி, ஒரிச்சேரிப் புதூரில் துருபடர்ந்த ரஜினி, விஜயகாந்த் போர்டுகள் நடப்பட்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இன்னும் பிள்ளையார் கருங்கல்லில் பிரம்மச்சாரியாக இருந்தார். புதூர் தாண்டி விஜயா காலனி போகும் ஒரு வளைவில் கொத்திக் குதறப்பட்டிருந்த சாலையைக் குதித்து குதித்துத் தான்டினோம். அங்கே சில வீடுகள் புதிதாக அழகாய் இருந்தன.

அதற்குள் கரும்பு காய்ச்சும் வாசம் காற்றோடு கலந்து வர, பத்து வருடங்கள் பின்னோக்கிப் போய் நினைவுகளை மீண்டும் புதுப்பித்து, அன்றும் இன்றும் தாவினோம்.

தொழுநோய் மருத்துவமனையில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சரிவில் ரோட்டோரம் இருந்த சரஸ்வதியில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' வந்திருந்தார். நால்ரோட்டின் நடுவில் துளியூண்டு பசியப் பூங்கா இருந்தது. சக்தி சுகர்ஸ் மெய்ன் கேட்டுக்குக் கொஞ்சம் மேடு ஏற வேண்டும். அதற்குள் எத்தனை ஞாபகங்கள்...!!

பாலு சார் ட்யூஷன் முடிந்தவுடன் கத்தரித்த வாழை இலைத் துண்டில் சூடாக பஜ்ஜியும், காரச் சட்னியும் யார் காசிலாவது சாப்பிடுவோம். அந்தச் சட்னி அன்று எலக்ஷனில் நின்றிருந்தால், எதிர்த்தவர்களுக்கு டெப்பாஸிட் கூட கிடைத்திருக்காது. அதற்கு அத்தனை அடிமைகள்..! அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூனை மீசை வைத்திருந்த சதீஷ் ஒன்பதாவதில் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று இன்னும் தெளிவில்லை..! மலை முருகன் கோயிலைத் தாண்டி, பவானி ஆற்றின் மறுகரையின் பெருந்தலையூரில் இருந்து பச்சை ஒயர்கூடையில் கொஞ்சம் புத்தகங்களை ஒளித்து சைக்கிளை மிதித்து வரும் அசோக் இன்று சிங்கப்பூரில் இருக்கிறான்.

குனிந்து பார்க்கும் எலெக்ட்ரிக் விளக்குகள் சோடியம் மஞ்சள் பூசி இருக்கின்றன. டீக்கடைகள் கொஞ்சம் வளர்ந்து பேக்கரி ஆகி இருக்கின்றன. கொஞ்சம் புதுக் கட்டிடங்கள் வந்து, ஒரு புதுப் பள்ளி வந்து, பெட்ரோல் பங்குகள் குட்டி போடிருந்தாலும், அந்த கந்தன் மலையும், ஊர்வலக் கரும்பு வண்டிகளும், பேக்டரிக் கறுப்புப் புகையும், சாய்ச்சும் போதை வாசமும், க்வார்ட்டர்ஸ் வாசல் அரசமரப் பிள்ளையார் எண்ணெய்த் திரிகளும் இன்னும் மாறவேயில்லை.

ப்ரம்மாண்ட ஏரிக்கரையில் ஒரு ஆலமரம் இருந்தது. இன்று இல்லை.

ரைஸ் மில் ஸ்டாப்பிங்கில் ஒரு மைல்கல்லில் உட்கார்ந்து கதை அளப்போம். கடக்கையில் சில யூனிஃபார்ம் சிறுவர்கள் அதே போல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தக் குடிசை டீக்கடையும், திட்டு வைத்த டீ பாய்லரும் அப்படியே..!

பள்ளி முகப்பைப் பார்த்துக் கொண்டோம். 'கன்ஸ்யூமர் க்ளப்' போன்ற புதுப் புது போர்டுகள் மின்னின. எஸ்.ஐ.டி.யின் வாசல் இன்னும் கொஞ்சம் முன் வைத்து கோட்டை போல் வடிவத்திருந்தனர்.

காலனியின் வாசல் பஸ் கூரையின் கீழ் எதேச்சையாகப் பார்க்க திருமுருகன் இருந்தான். பொழுதே போகாத ஞாயிறின் முற்பகலில் சோம்பி இருந்தவனிடம் கொஞ்சம் போல் பேசி விட்டு மீண்டும் மேற்கு நோக்கிப் போனோம்.

மூங்கில்பட்டி அல்லது கீழ்வாணி என்று குறிக்கப்படும் கீவானியில் ஒரு பள்ளி இருக்கின்றது. அந்த வழியில் கண்ட ஊர்களான அத்தாணி, பங்களாபுதூர், கள்ளிப்பட்டி அத்தனையிலும் தெற்கை நோக்கி ஒரு தார் வரப்பு வெட்டப்பட்டு, 'கோபிக்கு செல்ல இங்கே திரும்புக' என்று அம்புக்குறிகள் மூக்கை நீட்டிக் கொண்டிருந்தன.

கள்ளிப்பட்டியில் சந்தை. குறுகலான சாலையில் புகுந்து புகுந்து சென்றோம். ஊரை விலக்கி, கொஞ்சம் தூரம் செல்ல, மெய்ன் ரோட்டை முறைத்துக் கொண்டு கணக்கம்பாளையம் ஊருக்கு செல்லும் பாதை இருபுறமும் மரங்கள் கூடு கட்டியிருக்க, செம்மண் படர்ந்திருந்தது.

தூக்கநாய்க்கன்பாளையத்தில் இருக்கும் ஜே.கே.கே. கல்லூரியைப் பார்த்துக் கொண்டு அபாய வளைவைக் கடந்து எதிர் பாய்ந்த கார்களை அலட்சியத்து, இன்னும் வேகம் பிடித்து, ரிவ்யூ மிரரில் தெரிந்த வெள்ளைக் காண்ட்ஸாவை முந்த விடக் கூடாது என்ற அபத்த முறுக்கலில், கதறியது டி.வி.எஸ்.50....!

இதுவரை எல்லாம் நலமே...!!!

ர்களை மீறி, சுற்றிலும் அலையாடிய பச்சை வயல்கள் பரப்பில் வண்டி அலைபாய்ந்ததை உணர்ந்தேன். தடாரென்று ஓரங்கட்டி செக் செய்ய, பின் டயர் பஞ்சர்...!!!

திக்கென்றானது. எந்த ஊர் என்று தெரியாது; இந்த ஊர்களில் ரிப்பேர் கடைகள் இருக்குமா என்ற சந்தேகம்;

இறங்கிய பின் தான் அடிக்கின்ற வெயிலின் சுட்டெரிப்பு தெரிந்தது. ஓட்டி வந்த என் கைகள், கால்களில் அந்த 'புறுபுறுப்பு' சுறுசுறுவென கூசிக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் முந்தானையால் தலையை மூடி, அந்த வெயிலிலும் மற்றொரு பெண்ணிடம் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.

"அக்கா... இங்க பஞ்சர் ஒட்டற கடை எங்க இருக்குங்கா..?"

தைரியம் பெற்ற அக்கா, "இப்புடியே போனீங்கனா மேட்டுல ஒரு கட இருக்குதுங்க..." என்றார்.

பாலாஜி 'வினையே' என்று தள்ளிக் கொண்டு போகத் தொடங்க (இல்லாவிட்டால் மாமாகிட்ட வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே..!), நான் பொறுமையாக நடக்கத் தொடங்கினேன். அப்போது தான் சுற்றுப்புறத்தைக் கவனிக்க...!!விசிறி அடித்திருந்த வெயில்; உதறிப்போட்ட துணிகள் போல் கலைந்திருக்கும் மேகங்கள் துளியும் இல்லை; குறுக்கும் நெடுக்குமான மின் வயர்கள்; கேபிள் கடத்திகள்; சாலையோரப் புளிய மரங்கள்; முகம் கிடத்தி வைத்திருக்கும் மாட்டு வண்டிகள்; அச்சாணி செருகி கறுப்பு எண்ணெய் வட்டமாய்ப் புசின மரச் சக்கரங்கள்; ஒரு பக்கம் கிழிந்த இலை வாழைத் தோப்புகள்; ஓங்கி உயர்ந்து உலகளந்த தென்னைக் கூட்டங்கள்; சோளக் கருதுக் குருத்துகள்; புகையிலை மூட்டைகள்; சிதறியிருந்த கரும்புச் சக்கைகளும், பழுத்து, கழன்று காற்றில் சுற்றி விழுந்திருந்த பழுப்புத் தென்னை ஓலைகளும், செம்மண் பூமியும், காப்பாக வளர விட்டிருந்த நெருஞ்சி முள் செடிகளும், ஆடுகளும், கொஞ்சம் கிட்டத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக மடிப்புக்குள் படலம் படல்மாய் வகிடெடுத்து வளைந்து தொடர்ந்து வரும் மேற்குத் தொடர் மலைகளும், கூடவே மதியத்தின் மெளனமும்....!!!!

மேட்டில் ஏறிச் சென்றால், பஸ் ஸ்டாப்பில் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் மோர் மிளகாய், மிளகாய்ப் பொடி தடவிய அரிந்த மாங்காய்த் துண்டுகள், டயர் மேல் கிடத்திய பானைகளில் மோர், கம்புச் சோற்றுக் கூழ், இளநீர் என்று எல்லாம் இருந்தது. அவரிடம் கேட்க ரோட்டின் அந்தப்பக்கம் கை காட்டினார். அங்கே ஒரு சரிந்த புளியமரக் கிளையில் கட்டிய கிணற்றுக் கயிறில் சில டயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அது ஓர் அடையாளம். சைக்கிள் ரிப்பேர் ஷாப்புக்கான அடையாளம். நன்றி சொல்லி விட்டு அங்கே நகர்ந்தால், அந்தக் கடை பலகைகளால் மூடப்பட்டு, பூட்டு தொங்கியது. பக்கவாட்டில் இருந்து சத்தம் வர, அங்கே ஒரு தாத்தா - பாட்டி இருந்தனர். தளர்ந்த உடல். நடுங்கும் குரல். ஆனாலும் கேட்ட போது, "இங்க கட இல்ல சாமி. அவங்க காலி பண்ணிட்டு போய்ட்டாங்களே... கீழாக்க போனீங்கனா ஏளூர்ல கட இருக்கும் கண்ணு..." என்று பாசம் பொழிந்த அவர்கள் அமர்ந்திருந்த திண்ணையை ஒட்டி இருந்த வீடு வெளியே பூட்டியிருந்தது.

இன்னும் தள்ளிக் கொண்டே மேற்கு நோக்கிச் செல்ல, ஒரு பள்ளம் இரங்கி ஏற, ஏளூர் வந்தது. 'எழூர்' என்று அரசாங்க மஞ்சள் போர்டு சொல்லியது. தனியார் கடை போர்டுகளோ 'ஏளூர்'!

கொஞ்சம் ஒப்பிட பெரிய ஊர் போல் தெரிந்தது. எண்ணிப்பார்க்க நூறு/ நூற்றைம்பது பேர் அப்போது கண்ணில் பட்டனர். ஒரு சைக்கிள் கடை தெரிய, அங்கே விசாரித்தோம். அவரே டி.வி.எஸ்ஸையும் பார்ப்பார் என்று சொல்ல, அவரிடம் பாலாஜியையும் வண்டியையும் தள்ளி விட்டு, கொஞ்சம் சுற்றுமுற்றும் ஊர் சுற்றிப்பார்த்தேன்.

புளியமரத்தினடியில் இக்கடை. பின்பக்கம் ஒரு சாக்கடைக் குழி. கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்புறம் வரிசையாகக் கடைகள். ஒரு சலூன். இரண்டு பேர் காத்திருந்து அன்றைய தினத்தந்தியைப் படித்துக் கொண்டிருக்க, உள்ளே ஒருவர் தலை கொடுத்திருந்தார். குறுக்காக கடந்த ஒரு தார் ரோட்டின் அந்தப்பக்கம் ஒரு பலசரக்குக் கடையில் பாட்டிலில் பொருட்கள் சிறைப்பட்டிருந்தன. உள்ளே ப்ரிட்ஜில் கலர்கள். வெளியே நீர்த் தொட்டியில் குண்டடைத்த சோடாக்கள். எதிர்ப்புறம் ஒரு கோயில். வெக்கை படர்ந்திருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர். அவர்களில் கொஞ்சம் சிலர் உட்கார்ந்திருக்க, மிச்ச சிலர் படுத்திருந்தனர். அக்கூட்டத்தில் சேராமல், குடை பிடித்த பெண்மணி. மூன்று கழுதைகள் நாங்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அசையாமல் அவை நின்ற போஸிலேயே நின்று கொண்டிருந்தன. மற்றொரு பஞ்சர் ஷாப் தெரிந்தது. அது கொஞ்சம் நவீனம். காற்றடிக்க ப்ரெஷர் மெஷின். பூச்சிமருந்துக் கடையும், ஏரியா மூட்டைகள் அடுக்கிய உரக்கடையும் தெரிந்தன. ஒரு மளிகைக் கடை, ஒரு டீக்கடை, ரோட்டோர மரங்கள், நின்றிருந்த சைக்கிள்கள், ஒரு என்ஃபீல்டு, பால் டின்கள் இவற்றோடு கொஞ்சம் தாண்டினால், சரேலென விரியும் பச்சை வயல்கள் என்று டிபிக்கல் தமிழ்க் கிராமமாகக் காட்சியளித்தது.நாங்கள் கொடுத்திருந்த சைக்கிள் ஷாப்பில் சின்னப் பையன்கள் நான்கு பேர் ஒரு சைக்கிளைப் போட்டுப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கவிழ்த்துப் போட்டு சீட் ஸ்ப்ரிங்குகளை அழுத்திப் பிடிக்க, மற்றொருவன் செய்ன் பாடி மேலேயே ஏறி அமர்ந்து கொண்டு ஸ்க்ரூ ட்ரைவரால் திருப்பிக் கொண்டிருக்க, மற்றொருவன் டயரைச் சுற்றிக் கொண்டிருக்க, மீ இளையன் மட்டும் தள்ளி நின்று கற்றுக் கொண்டிருந்தான். எனக்குப் பார்க்கையில், மாட்டிற்கு லாடம் அடிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.

அவ்வப்போது இவர் அதட்டிக் கொண்டிருந்தாலும், அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவரும் இப்படியெல்லாம் செய்து தான் சைக்கிள் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

பஞ்சர் இல்லையாம். வந்த உச்ச வேகத்தில், பதினொரு மணி கொதி வெயிலில் கொப்பளித்துக் கொண்டிருந்த தார் ரோட்டின் சூடு ஏறிப் பரவி, உரசல் வெப்பத்தில் ஏற்கனவே பஞ்சர் ஒட்டிய பகுதி பிய்த்துக் கொண்டு வந்திருக்கின்றது. அதை மீண்டும் ஒட்டி, அடைத்து, காற்றை கைப்பம்பில் நிறைத்து முக்கால் மணி நேரத்தில் தயாரித்திருந்தார். இருபது ரூபாய்.

ப்ரதேசப் பொருளாதாரத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இருந்த மற்றொரு கடையில் ஏர் செக் செய்து, ப்ரெஷர் கருவியில் காற்றை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டோம். 'எவ்வளவு தரணுங்க..?' என்று கேட்டோம். 'ஒரு ரூபா குடுங்களேன்...' என்றார், ஏதோ புள்ளைங்க குடுக்க ஆசப்படறாங்க, தடுப்பானேன் என்ற பாவனையில்! இந்த வேலைக்கெல்லாம் இந்த ஊரில் காசு குடுக்க மாட்டாங்க. இதெல்லாம் காலெஜுக்குப் போகும் போது அவசர அவசரமாக சலூனுக்குள் நுழைந்து கிடைத்த சீப்பில் தலைவாரிக் கொண்டு, போய்க் கொண்டே இருப்பது போல்! என்று மனதிற்குப் பட்டது.

மீண்டும் பயணம் கிளம்பினோம். மற்றொரு நால்ரோடு குறுக்கிட்டது. நேராகப் போனால் சத்தி. இடது திரும்பினால் பெரிய கொடிவேரி. வலதில் மாதேஸ்வரன் மலைக்கு! நேராகப் போனோம். கொடிவேரி பெயரைப் பார்த்தவுடன் தான் மனதில் வரும் போது அங்கும் ஒரு விசிட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உறுதி செய்து கொண்டோம்.

ஒரு வழியாக சத்தி நெருங்கினோம். ஆனால் சத்தி நகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னும் நேராகச் சென்றாலே மைசூர் ஹைவேயைப் பிடித்து விடலாம் என்று சொன்னார்கள். சத்தியிலிருந்து ஒன்பது கி.மீ. பண்ணாரி கோயில். எனவே நகருக்குள் சென்று ட்ராஃபிக் இன்னல்களில் சிக்கிக் கொள்ள இச்சை இல்லாததால், கொஞ்சம் ரோடு மோசமாகவே இருந்தாலும் பரவாயில்லை என்று லெஃப்ட் கட் அடித்து நகருக்குள் செல்லாமல், நேராகவே சென்றோம். வழியில் ஒரு கல்யாண மண்டபம், ஒரு சுடுகாடு, சில வயல்கள், ரோஸ் பூசிய புதுக் கட்டிடங்கள், அரட்டைக் குழாம் ஒன்று என்று கண்ணில் பட்டனர்.

ஹைவேயை அடையும் வரை தத்தளித்து தான் தவித்து சிக்கி முக்கி, தட்டுத் தடுமாறிச் என்ற வண்டி, பின் ஜிவ்வென்று பறந்த்து.

கொஞ்ச தூரம் செல்லும் போதே ஏதோ கர்நாடகாவிற்கே சென்றது போல் உணர்வு. அத்தனை கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்கள் கடந்தன. கோவை - மைசூர், சத்தி - மைசூர் / சாம்ராஜ் நகர் / தாளவாடி என்று கலர் பஸ்கள், ட்ராவலர்ஸ்கள், சரக்கேற்றிய லாரிகள் அத்தனையையும் பார்த்தோம். வண்டி தரைத் தளத்தில் இருந்து, மலையேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஊரே தென்படவில்லை. அங்கங்கே சில ஓட்டு வீடுகள் மட்டுமே. திடீரென 'வனச் சரகம் வரவேற்கிறது' போர்டு வந்தது. பாரஸ்ட் ரீஜன் என்று புரிந்தது. யானை படம் போட்ட போர்டு தென்பட்டது. சுற்றிலும் காடுகள்; வறண்ட காடுகள்; முட் செடிகள்; புளிய மரங்களில் புளியங்காய் அடித்துக் கொண்டிருந்தனர். அப்படி அடித்தே மூட்டைகள் நிரம்ப இறுக்கக் கட்டியிருந்தனர். பார்க்கும் போதே நாவூறியது.

(நீங்கள் புளியங்காய் சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அதுவும் நம் வீட்டில் போடும் புளி அல்ல. அது வேறு தினுசில் செய்யப்படும். மரப்புளியின் சுத்திகரிக்கப்பட்ட எச்சம். மரத்தில் இருந்து அடித்து..? சாலையில் அரசாங்கப் புளிய மரங்கள் வெள்ளையும் கறுப்புமாய் வர்ண அடையாளம் பூசியிருக்கும். அவற்றில் குச்சித் தொடர்போடு தொங்கிக் கொண்டிருக்கும் புளியங்காய்கள். கல்லெடுத்துக் குறி பார்த்து அடித்தாலோ, அல்லது கொத்தாய்ப் பிடித்து உலுக்கினாலோ சிந்திச் சிதறும். அவ்வையாரைக் கேள்வி கேட்ட முருகச்சிறுவன் பற்றிய பயமின்றி எடுத்து ஊதித் தட்டுவோம். பின் பிரிக்க வேண்டும். அந்தக் காம்பைப் பிடித்து மெல்ல பிரித்தால், சுவையாக ஒரு வாசம் பரவும் பாருங்கள். யப்பா...! சமையற்கட்டில் இருக்கும் புளியின் வாசம் எல்லாம் இதற்கு உறை போடக் காணாது. பிறகு அதை அப்படியே கடித்துச் சாப்பிட்டால..... ம்ம்ம்ம்ம்...!!! அதெல்லாம் அந்தக் காலம்...!!)

சரேலென ரோடு வளைகிறது; ஏறுகிறது; இறங்குகிறது; நதி மட்டும் அல்ல, பெண்ணுக்கு நெடுஞ்சாலையும் ஒப்புமை சொல்லலாம் என்று தோன்றியது.

ண்ணாரி என்பது ஊரல்ல; அது ஒரு கோயில் மட்டுமே என்று பார்த்தவுடன் நினைத்தோம். சாலையோரக் கோயில். அதனைச் சுற்றி சர்வைவல் கடைகள்; இளநீர், மோர்க் கடைகள்; ஐஸ்க்ரீம், தண்ணீர், உப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று கலந்து கட்டிய கடைகள்.

ஒதுங்கியிருந்த ஒரு கட்டிடத்தின் அருகிலேயே நிறுத்தி விட்டு, மேலே விளையாடிக் கொன்டும், ஓடிக் கொண்டும், தாவிக் கொண்டும் இருந்தா முன்னோர்களைக் கொண்டு கொஞ்சம் மிரட்சி இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் நகர்ந்து கோயிலுக்குள் நுழைந்தோம்.

அன்று பிரதோஷம். அடுத்த நாள் மகா சிவராத்திரி. எனவே கூட்டம் கணிசமாக இருந்தது, அந்த மதியம் 13:30லும்! வளைந்து சென்ற நான்கு வரிசைக் கம்பித் தடுப்பான்களில் மெல்ல நகர்ந்தோம்.

ஓர் அம்மா மாவிளக்கு ஏற்றி வந்தார். வெண் பஞ்சு போல் இருந்த சிறு பெண்குட்டி அடுத்த வரிசை ஆளிடம் கொஞ்சினாள். சிவப்பு ட்ராயர் பையன் அதை இழுத்து விட்டுக் கொண்டேயிருந்தான். லைட் ப்ளூ மாருதியில் வந்த ஒரு குடும்பம் அவ்வப்போது விசிறிக் கொண்டது. தேங்காய் உடைத்து உடைத்துக் கொடுத்தவர் "நகருங்..நகருங்..நகருங்..நகருங்..." என்று பீரியாடிக்காக சொல்லிக் கொண்டேயிருந்தார். பர்தா அணிந்த பெண்ணும் நின்றதை யாரும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை.

உச்ச வரிசைக்கு வந்து அலங்காரத்தில் இருந்த மாரியம்மனை வணங்கிக் கொண்டே வெளியே வந்து விட்டோம். கருப்பாக சாம்பல் போன்ற ஒன்றைத் தான் ப்ரசாதமாகத் தருகிறார்கள். அதை வாங்கி பிரகாரம் விட்டு வந்தவுடன் நாம் காலண்டர் தாளைத் தேடுவதைக் கண்டு, இருவர் சூழ்ந்து தயாராக வைத்திருந்த துண்டுக் காகிதங்களைக் கொடுத்து ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அடுத்த ஆளைப் பார்த்தார்கள்.

மண்டபத்தை விட்டு வெளியே குண்டத்திற்காகத் (ஏப்ரல் 4) தயார் செய்யப்ப்டும் தீ மிதிக்கப்படும் இடத்தைப் பார்த்தோம். அதைச் சுற்றிலும் கன்னடக் கொடி நிறம் பூசிய கம்பங்கள் காவலுக்கு இருந்தன. ஊஞ்சல் இருந்தது. ஆட்டி விட்டு வணங்கினோம். குண்டத்தில் இருந்து கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து சுவைத்துக் கொண்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்து இளைப்பாறு முன் பஞ்சாமிர்தம் வாங்கினோம்.

ஸ்தல வரலாறு படித்து விட்டு, கோவை, ஈரோடு செல்லும் பேருந்துகளைப் பார்த்து விட்டு, ஓரமாக குத்த வைத்திருந்த பாட்டியிடம் மோர் ரெண்டு டம்ளர்கள் குடித்து விட்டு, கொதித்த தாரில் நடந்து மீண்டும் வண்டியைக் கிளப்பு முன் சில க்ளிக்குகள் ::

மலைக்கு அந்தாண்ட கர்நாடகம்.கோயிலில் இருந்து திரும்ப சத்திக்கு வரும் போது, காட்டுப் பகுதி அல்லவா, "இப்ப திடீர்னு புலி ஒண்ணு எதுக்க வந்தா எப்டி இருக்கும்..? யான வந்தா எப்டி இருக்கும்..?" என்று கிலியூட்ட முயன்று கொண்டே வந்தான் பாலாஜி. மேற்சொன்னவை வராமல் வேறொன்று வரப் போவதாகத் தெரிந்தது. காலையில் வண்டியில் கிளம்பியதில் இருந்தே எங்கும் டவுன்லோட் செய்யாததால், ஆள் அரவமற்ற இடம் பார்த்து கண்டுபிடிக்க ஒரு போர்டு இருந்தது. 'வன விலங்குகள் கடக்கும் பகுதி'. வழி தவறிக் கன்னட / கேரள நிலத்தில் இருந்து ஏதேனும் விலங்குகள் வந்து விட்டால், எங்கே கடக்க வேண்டும் என்பது தெரியாமல் குழம்பி விடக் கூடாது என்ற அக்கறையில், மும்மொழிக் கொள்கைப்படி 'WILD ANIMAL CROSSING'.அங்கே போய் ரிலாக்ஸ் ஆகி விட்டு, அந்த போர்டுக்கு சத்திய ஆதாரமாக இருந்த அடையாளத்தையும் புகைப்படமாகச் சேகரித்து விட்டு மீண்டும் உற்சாகமாக முறுக்கினேன்.ஒரு வளைவில் சில வண்டிகள் நின்று சாலையின் அந்தப்புறத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். 'என்னடா'வென்று பார்த்தால், அட, காட்டு யானைக் குடும்பம் ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா..? குளிப்பது யானையோ, த்ரிஷாவோ, பூமிகாவோ, வேடிக்கை பார்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் தானே!

இலக்கணத்திற்கு கொஞ்சமும் மாறாமல் நாங்களும் கீழ் இறங்கிப் பார்த்தோம்.

ஒரு யானைக் கூட்டம். நீளமான தந்தத்துடன் ஒரு கொம்பன். சுற்றியும் அவரது மனைவிகள். இரண்டு குட்டிகள். வெயில் காலத்தில் காட்டுக்குள் நீர் ஆதாரங்கள் வறண்டு விட, ஊருக்குள் வந்து எல்லோரையும் மிரட்டக் கூடாது என்று விலங்குகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு டீல் போல, ஆங்காங்கே நீர் நிரம்பிய தொட்டிகள் / குளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மோட்டர் மூலம் பம்புகள் வழியாக குபுகுபுவென நீர் பாய்ந்து கொண்டே இருந்தது. நாங்கள் அவர்களை, அவர்கள் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். 'மானங்கெட்ட பயலுவ, அடுத்தவங்க குளிக்கறத எப்புடி வேடிக்க பாக்கறானுவோ" என்று ஒன்று சொல்ல, மற்றவை 'இதை நாங்கள் வழிமொழிகிறோம்' என்று பதில் பிளிறின.பார்த்தார்கள்...! நாங்கள் நகருகின்றதாக இல்லை என்று புரிந்து கொண்டதும், 'பொளப்பத்த மனுசனுக..' என்று முனகிக் கொண்டே, அவை குளத்தில் இருந்து வெளியேறி, மண்ணை வாரி தன் மேல் இறைத்துக் கொண்டு, எங்களுக்குப் பழிப்பு காட்டி வனத்திற்குள் செல்லத் துவங்கின.

அவை சென்ற பின் தான் ஒரு மரத்தின் அடியில் மான் ஒன்று நிற்பதைப் பார்த்தோம். இந்நேரம் வரை அது கண்ணில் படவில்லை.

மீண்டும் நகருக்குள் நுழைவதற்கு முன் இந்த படம் ஒரு ஹைக்கூவாகத் தோன்றியது. க்ளிக்கினேன்.இந்தப் பயணப் பதிவிற்கு 'அலீம் பீடியும் அய்யனார்களும்' என்று Catchyயாகத் தலைப்பு வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...?

த்தி பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த ஒரு சுத்தமான வெஜ் ஹோட்டலுக்கு நுழையும் முன் அம்மா call செய்தார்கள். கோயிலுக்குப் போய் விட்டு வருவதால், சண்டே என்று பார்க்கக் கூடாது.வெஜ் தான் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷனாகக் கூறினார்கள். எனவே அந்த வெஜ் ஹோ.க்குச் சென்று காளான் ரைஸ் ஆர்டரிட்டு ஈட்டினோம். காளான் வெஜ் தானா என்ற சந்தேகம் இருந்தாலும் பசிக்கு முன் எடுபடவில்லை.

பெட்ரோல் அடித்து விட்டு, ஊருக்குத் திரும்பலாம் என்று செல்லும் வழியில் கொடிவேரி சென்று ஒரு விசிட் அடித்து விட்டு வரலாம் என்று ட்ராக் திருப்பி உள்ளே ஏழு கி.மீ சென்று ஓர் ஒற்றையடிப் பாதையில் ஜிங் ஜிங் என்று ஆடி ஆடி, ஒரு குட்டையோரமாகவே போய், காக்கிக் காரர் இருவர் தூங்கிக் கொண்டிருக்க, சீட் கிழித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் ஏழு ரூபாய் சீட் வாங்கி அணைக்கட்டுக்குச் சென்றோம்.

என்னவாகி விட்டது என்றால், நாங்கள் சென்றது அணையின் மறுகரை. இங்கே குளிக்க வழியில்லை. அக்கரைக்குச் என்றால் தான் குளிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. செம கடுப்பாகிப் போய் விட்டது. பரிசல்காரர்கள் ஒரு ட்ரிப் அடித்து அங்கு போய் வரலாம் என்றார்கள். ஆனால் வண்டியை இங்கே விட்டுப் போய் வருவதற்குத் தயங்கினோம். அந்தக் கரைக்குப் போவதென்றாலோ, மீண்டும் வந்த 7 கி.மீ. தூரம் ரிட்டர்ன் அடித்து, சத்திக்குள் புகுந்து நகருக்குள் ஊர்ந்து கோபி செல்லும் மெய்ன் ரோட்டைப் பிடித்து கோபி நோக்கி விரைய, சத்தியிலிருந்து நான்கு கி.மீ தள்ளி இந்த அணைக்கான கட் பிரிந்து உள்ளே இரண்டு கி.மீ. வர அக்கரை வருமாம்.

பார்த்தோம். 'இது ஆவறதில்லை' என்று முடிவு செய்து, இன்னொரு நாள் முழுக்க ஆட்டம் போட வருவோம் என்று சோகமாக (இருக்காதா பின்னே..? ;-( காலுக்கெட்டிய அருவியில் குளிக்காமல் போகிறேனே..!!! காண்க :: தலைக்குள் சிக்லெட்ஸ்! பொன்முடி ) சில க்ளிக்குகள் மட்டும் அடித்து திரும்பினோம்.

இந்தப் படத்தைப் பார்க்கும் போதே அள்ளி அள்ளிக் குடிக்கணும் போல இருக்கு இல்ல..?

முதலில் இதைப் பார்த்து விட்டு 'இது தான் அருவியா'ன்னு பாலாஜி கேட்டான்.வசர அவசரமாக மாலை மங்கிக் கொண்டு, மேலை அடிவானமெங்கும் விரிந்திருந்த பொன் மஞ்சள் போர்வை எங்களை ஜொலிக்க ஜொலிக்க மூடிக் கொண்டு வர, அந்த ஞாயிற்றுக்கிழமை அற்புதமான ஒரு நாளாக நிறைவுற்றதை மனதில் இருந்த களிப்பும், உடலில் இருந்த களைப்பும் உணர்த்திக் கொண்டே இருக்க, கடைசியாக எடுத்த இந்த இரு படங்களோடு திரும்பிக் கூட பார்க்காமல் வந்த வழியிலேயே வீடு நோக்கி விரைந்தோம்.

ஒரு பக்கம் மொட்டை வெயில்...!மறுபக்கம் பச்சை நிழல்...!ஆதியும் தெரியாமல் அந்தமும் அறியாமல் இரண்டிற்கும் இடையில் ஊடுறுவிச் சென்று கொண்டே இருக்கின்றது பயணம்...!