Sunday, July 29, 2007

இவிங்களத் தெரியுமுங்களா...?

இவிங்களத் தெரியுமுங்களா...?

தெரிஞ்சதுன்னா அட்ரச சொல்லிப்போட்டு போங்க... ஏதோ பேமசான டயலாக்கெல்லாம் சொல்லீருக்காக போல! கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னுதேன்...


1. காரமடை ரங்கநாதன்

2. அம்சவேணி பழனிச்சாமி

3. குஞ்சு கவுண்டர்

4. தவசி5. நாகராஜசோழன் M.A.

6. கோபால், LIC ஆபீசர்

7. பன்னிக்குட்டி ராமசாமி8. பழனி சக்திவேலு9. கமலி
10. கோவாலு

11. பாக்கியலச்சுமி

12. ஒத்த மீசை குப்புசாமி

13. வைத்தீஸ்வரி

14. செம்புலி

15. நீலவேணி16. ராசப்பா

17. பயில்வான் பாலகுரு, வலையபாளையம்

18. காளிங்ஸ்

19. வெங்குடான்

20. குண்டலகேசி

Saturday, July 28, 2007

கொங்கு வட்டார வழக்கு - ‍மூன்றாம் பாகம்

சொற்கள் ஊற்றினை போல சுரந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசிப்பதற்கான நேரமும் மனநிலையும்தான் வருவதில்லை.

பின்னூட்டங்கள் வாயிலாகவும், தனி மின்னஞ்சல் மூலமாகவும் இப்பதிவினை குறிப்பிடும் நண்பர்களின் பங்களிப்பு தொடர்ந்து உற்சாகமூட்டுவதாக இருக்கின்றது.

இந்தச் சொற்களில் பெரும்பாலானவை என் ஆயாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை. நான் பார்த்த, பார்க்கப் போகும் மனிதர்களுல், ஆயாதான் இந்தச் சொற்களை இறுதியாக பயன்படுத்தியவரோ என்ற பதட்டமும் ஒட்டிக் கொள்கிறது. கிழவி தன்னோடு சேர்த்து புதைத்துக் கொண்டதோ என்ற சந்தேகமும் வருகிறது.இன்னமும் என் மண்ணில் புழங்கிக் கொண்டுதான் இருக்கும் என்றாலும், எனக்கு இவற்றோடான அறிமுகம் அருகிக் கொண்டே வருவதும் இப்படி எண்ணக் காரணமாக இருக்கலாம்.

1. வங்கு - பொந்து, சந்து

2. கம்மனாட்டி - முட்டாள், மடையன்

3. உருமாளை - தலைப்பாகை

4. சிம்மாடு - தலைப்பாகை.தலைப்பாகையில் இருந்து சற்று வேறுபட்டது. ஏதேனும் பொருளை தலையில் சுமக்கும் போது நழுவி விடாமல் இருப்பதற்காக துணியைச் சுற்றி வைப்பது.

5. கருப்பு - கருமாதி(ஈமச்சடங்கு)

6. அவுசாரி - விபச்சாரி

7. கட்டுக்கொலை - தன் சாதியைச் சார்ந்த நிகழ்வுகளில் பங்கு பெறும் மற்ற சாதிகள்.உதாரணமாக, கவுண்டர் இனத்தைச் சார்ந்தவர்கள் நாவிதர்கள், குயவர்கள் போன்றவர்களை கட்டுக்கொலைக்காரர்கள் என்பார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்(சக்கிலியர், பறையர்) இந்தக் கட்டுக் கொலைக்காரர்கள் என்ற சொல்லுக்குள் வரமாட்டார்கள்.

8. ஓரியாட்டம் -சண்டைசொற்றொடர்: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.

9. மிஞ்சி - மெட்டி

10. பொல்லி - பொய்.

11. அக்கட்ட - அந்தப் பக்கம்.அடுப்புக்கிட்ட நிக்காத. தீ மூஞ்சிலையே அடிக்குது. அக்கட்ட போடா.

12. இக்கட்ட - இந்தப் பக்கம்.இந்த வேச காலத்துல அக்கட்ட இக்கட்ட நகர முடியல.

13. வேச காலம் - கோடை காலம்

14. ராவுடி - டார்ச்சர்அந்தப் பையன் செம ராவுடி புடிச்சவன்.

15. ராங்கு - தவறாக நடத்தல்.ஏண்டா போலீஸ்காரங்கிட்ட ராங்கு பண்ணுனா அப்பாம என்ன முத்தமா கொடுப்பான்?

16. அப்பு - அறை.அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா. மொகற கட்ட பேந்து போற மாதிரி.

17. மொகற கட்ட - முகம்

18. செம்புலிகுட்டி - செம்மறியாட்டுக்குட்டி

19. அக்கப்போரு - அட்டகாசம் இந்த பிலாக் எழுதறவிய அக்கப்போரு தாங்க முடியலைடா. :)

20. பொடனி - தலையின் பின்புறம்

21. முசுவு - கவனமாக/ குறிக்கோளுடன்குடுத்த வேலைய ஒரே முசுவுல செஞ்சு முடிச்சாதான் உங்கப்பனுக்கு தூக்கமே வரும்.

22. வல்லம் - மூன்று அல்லது நாலு படி அளப்பதற்கான அளவை. (கிட்டத்தட்ட 3.5 கிலோகிராம் வரும்)

23. அலும்பு - அலம்பல்.

24. அரமாலும் - ரொம்பவும். அரமாலும் அலும்பு பண்ணுறாடா அவ.

25. திலுப்பாமாரி - மேனா மினுக்கி

26. அட்டாரி - பரண்.

27. புழுதண்ணி - இரவில் மீதியான சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்கள். விடிந்த பின் அந்த நீர் புழுதண்ணி.

28. மக்காநாளு - அடுத்த நாள்

29. சீராட்டு - கோபம்.கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகுல. அதுக்குள்ள புள்ள சீராடிட்டு வந்துடுச்சு.

30. அன்னாடும்- தினமும்

31. பால்டாயில் - பாலிடால் என்ற விவசாய பூச்சிக் கொல்லி.யார் விஷம் குடித்தாலும் இதைத்தான் சொல்லுவார்கள்

32. ஒரு ஒலவு(உழவு) மல - ('ழ'கர உச்சரிப்பு இருக்காது)மழை பெய்யும் அளவை குறிப்பது.ஆட்டுக்கல் அல்லது உரலில் இருக்கும் குழி நிரம்பினால் ஒரு உழவிற்குத் தேவையான அளவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானம் செய்து கொள்வார்கள்.

33.அகராதி புடிச்சவன் - விதண்டாவாதம்/குறும்பு பிடித்தவன்.

34. தாரை - பாதை. எறும்பு தாரை- எறும்பு ஊர்ந்த பாதை.

Thursday, July 26, 2007

கொங்கு வட்டார வழக்கு‍- இரண்டாம் பாகம்

1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.

2. பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம் பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார். இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.

3. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன். உதாரணமாக், மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.

4. தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள் கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக, கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட பொதி நெல் வாங்கிக் கொள்வார்.

5. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.

6. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.

7. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை) நீர் நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில் சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

8. ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.

9. ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)

10. அங்கராக்கு - சட்டை

11. பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)

12. செம்பூத்து - செண்பகப் பறவை

13. கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.

14. புறடை - புரூடா (பொய்)அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.

15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.

16. சாவுகாசம் - சகவாசம்

17. ரவைக்கு - இரவுக்குசொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.

18. போத்தாலை - புகையிலை.

19. கொழுந்தனார் - கணவனின் தம்பி

20. கொழுந்தியா - மனைவியின் தங்கை

21. நங்கையா - மனைவியின் அக்கா.

22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு

23. தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக, "செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.

24. தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால், பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது)

25. மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?

26. கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.

27. நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)குழந்தை நலங்கி போச்சு

28. கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.

29. மோடம், கருக்கல் - மேகம்

30. கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)

31. சடஞ்சு - சோர்வடைந்துமனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?

32. நேக்கு - கவனமாக,சரியாகநேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு

33. எச்சா - அதிகமாக. சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.

34. நேசர் பாரு - உளவு, உண்மை நிலைஎதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ

35. பூலவாக்கு -உண்மை நிலை.டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?

36. பண்டம் பாடி - கால்நடைகள்

37. பீத்து - பெருமைஅவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.

38. பீத்தை - பழையஅந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.

38. சீக்கு- நோய்

39. பிலுக்கு - பந்தா.அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.

40. கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து
கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.

41. பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரிஎன்ன பாப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?

42. தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.

43. பொட்டாட்டமா இருத்தல் - அமைதியாய் இருத்தல்.

44. ஒருசந்தி இருத்தல் - ஒரு பொழுது இருத்தல்(ஒக்க பொத்து உண்டேதி)

45. பட்டண ரவை - வெள்ளை ரவை(அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவது)

46. கோசாப்பழம் - தர்பூசணி

Wednesday, July 25, 2007

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது.

1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

7. என்றது - என்னுடையது.

8. உன்றது - உன்னுடையது.

9. அப்பச்சி- தாய்வழி தாத்தா

10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.

11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

14. நடவை - வெளிப்புறக் கதவு

15. வட்டல்- தட்டு

16. நருவசா- முழுவதுமாக

17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

25. அவத்தைக்கு - அங்கே

26. இவத்தைக்கு - இங்கே

27. சலவாதி - மலம்.

28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

29. போசி- பாத்திரம்

30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

35, 36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)

39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)

40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

41. சீவக்கட்டை- விளக்குமாறு

42. கூமாச்சி- கூர்மையாக

43. தொறப்பு - பூட்டு

44. தொறப்புக் குச்சி - சாவி

45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

46. மொடக்கடி - மொடக்கடி பண்ணாதே - இடக்காகச் செய்யாதே

47. ரவுசு - ரகளை என்று பொருள் படும் சொல்

48. பண்ணாடி -- கணவர்

49. பண்ணாட்டு -- ruling , power / வெட்டிப் பண்ணாட்டு -- useless show of power

50. வெருசா -- சீக்கிரமாய்

51. சாளை (லை) --- farmhouse usually in the middle of the farm

52. நடுவலவன் -- brother in between

53. பண்ணாமை (பண்ணாம) - நிலத்தில் பயிரிட்டிருப்பது.

54. மறுக்கா - மறுபடியும்.

55. ஒறம்பற - உறவின் முறை

56. சீசா - பாட்டில்

57. எத்தாசோடு - எவ்வளவு பெரிசு

58. நங்கையா - நாத்தனார்

59. பொடனி - பின்கழுத்து

60. நோம்பி (நோன்பு என்பதன் மருஉ) - பண்டிகை

61. எசகடம் = நேர்த்திக்கடன்

62. அக்கப்போர் -- தொந்தரவு / pestering

63. திருவாத்தான் -- கோமாளி / Jocker

64. குரவளை - தொண்டை

65. எச்சு - அதிகம்

66. முக்கு - முனை

இந்தச் சொற்கள் ஏற்கனவே என் வலைப்பதிவில் இருந்தவைதான். அதே பதிவில் நண்பர்கள் பின்னூட்டமாக கொடுத்த சொற்களும் இணைக்கப்பட்டுள்ளன‌. 'கொங்கு'விற்கென பிரத்தியேக பதிவு வரும் போது அங்கு ஒரு பிரதி வைப்பது அவசியமாகத் தோன்றிய்து. இன்னும் மூன்று தொகுப்புகள் இருக்கின்றன. அவற்றையும் இங்கு பதிவு செய்கிறேன்.

Kongu Cusine in chennai

வடநாட்டு ரொட்டிகளும் பன்னீரும் குண்டூர் காரக்குழம்பும் குண்டு மிளகாயும் செட்டிநாடு மசாலாக்களும் ஊர்ல அங்க அங்கே கடைதிறந்து திரும்பினபக்கமெல்லாம் கிடந்தாலும், வறுத்த நிலக்கடலைய அரைச்சு விட்ட கொழம்பும், பயிறு வகையரா ஒவ்வொன்னையும் ஒவ்வொரு விதமாவும், எண்ணையும் காராமும் அளவா விட்டு சமைக்கிற கொங்கு சமையலுக்குன்னு ஒரு கடையில்லையேன்னு நாக்கை கடிச்சுகிட்டு சங்கடப்படுற சென்னை வாழ் கொங்கு மக்களுக்கு ஒரு நல்ல சேதி :)

நம்முர் சமையலுக்குனு விசேசமா ஒரு கடை சென்னையிலயே வந்தாச்சுங்க.. நம்மூரு கிருஷ்னா ஸ்வீட் காரங்க தான் இதையும் திறந்திருக்காங்க.. கடை பேரு என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் .. 'ரசம்'..
கேக்கும் போதே லேசா பசியெடுக்கிற மாதிரி இல்ல..

மேலும் விவரங்களுக்கு

நம்ம ஊரு சமையலேய்...

பச்சைப்பயிறு கடைஞ்சது


தேவையான பொருட்கள்
  • பச்சைப்பயிறு (பாசிப்பயிறு) - 200 கிராம்,
  • சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு,
  • தக்காளி - 1,
  • வர மொளகாய் - 5,
  • கொத்தமல்லி- 2 டீ ஸ்பூன்,
  • ஜீரகம் - 1 டீ ஸ்பூன்,
  • பூண்டு - 4 பல்,
  • கறிவேப்பிலை - சிறிது,
  • உப்பு - தேவையான அளவு,
  • கடலை எண்ணெய் - 1 ஸ்பூன்.

செய்முறை:

1) பச்சைப்பயிறை லேசாக வறுத்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2) ஊறிய பயிறை குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அஞ்சாறு விசில் விட்டு வேக வைக்கவும்.
3) வெந்த பயிறை மத்தால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
4) வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
5) கொத்தமல்லி, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து, பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
6) வாணலியில் எண்ணெய் விட்டு, பொடித்த கொத்தமல்லி, சீரகம், நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
7) தக்காளி நன்கு கரைந்த பின், கறிவேப்பிலை,மசித்த பயிறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
8) சூடான சாதத்தில் தேங்காய் எண்ணெய்/நெய் விட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.