Skip to main content

அமராவதிக் கரையோரம்

இந்த வலைத் தளத்தை அடிக்கடி திறந்து பார்ப்பதுண்டு. சில ஆண்டுகளாக பதிவுகள் இல்லாமல் இருக்கும் இந்த பிளாக்கைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நண்பர் இளவஞ்சியின் நினைவு வந்து போகிறது.

அவர் பணி நிமித்தமாக யூ.எஸ் சென்ற பிறகு என்ன ஆனார் எனத் தெரியவில்லை. பழைய பதிவர்கள் உதயகுமார் போன்றோரைத் தொடர்பு கொண்டு கேட்ட போதும் தெரியவில்லை.இந்தத் தளத்தில் ஏதேனும் பதிவிட்டால் யாராவது கண்ணில் பட்டு விடாதா என்ற நப்பாசை..

கொங்குச் சீமையைப் பிண்ணனியாகக் கொண்ட ஒரு பதிவை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

********

இது ஒரு மெகா சீரியல். இப்போது நாம் பார்க்கவிருப்பது அதில் ஒரு எபிசோடு. முந்தைய பகுதிகளைப் பார்க்காமல் இதைக் கண்டால் புரியாது என்பதால் பின்னணி என்ற பெயரில் ஒரு முன் கதைச் சுருக்கம்.

நாற்பத்து மூன்று வீடுகளே உள்ள சின்னஞ்சிறு கிராமம் செல்லப் பிள்ளை புதூர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளிக் கட்டிடமும், இப்போது பால் சொசைட்டியாக இயங்கும் பழைய திண்ணைப் பள்ளிக்கூடக் கட்டிடமும், அவை இரண்டுக்கும் இடையில் கிழக்குப் பார்த்து அமராவதி ஆற்றை நோக்கியபடி ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் முனீஸ்வரர் மற்றும் விநாயகர் (தமிழ் சினிமாவில் பஞ்சாயத்து சொல்வதற்குத் தோதான) திண்ணைக் கோவில்களும் முகப்பில் அமைந்திருக்கும் கிராமம்.
தினமும் காலை, மாலை இரு வாகன்ங்கள் நிச்சயமாக வந்து போகும். ஒன்று எஜமான் படத்தில் வரும் ரஜினியை நிஜத்தில் நிறுத்தும் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் நடத்தும் தனியார் பள்ளியில் இருந்து வரும் ஸ்கூல் வேன். மற்றது பால் சொசைட்டியில் பால் எடுக்க வெரும் டெம்போ. மற்றபடி பஸ் பிடிக்க வேண்டுமானால் ஸ்கூல் வேன் கூடவே ஆறு கிலோ மீட்டர் ஓட வேண்டும். இல்லையானால் ஆற்றைத் தாண்டினால் பஸ். அதுதான் வெளி உலகுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும் முதன்மையான ரூட்.
 
இருபதுக்கும், முப்பந்தைத்துக்கும் இடையில் பிராயம் கொண்ட ஆட்கள் அரிதாகத் தென்படும் ஊர். ஏகதேசமாக கேரளா கந்துக் கடைக்கும், திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் போய் விட்டார்கள். அமெரிக்கா மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டு ஒருத்தியும், பெங்களூர் சென்னை என சாஃப்ட்வேரை நோக்கி நாலு பேரும், கோயம்புத்தூரில் சலூன் வைப்பதற்கு இரண்டு வாலிபர்களும் போய் விட இரண்டு பேர் தினசரி காலையில் எட்டே முக்கால் பஸ்ஸில் தாராபுரம் போய் சாயங்காலம் ஐந்தரை பஸ்ஸில் திரும்புகிறார்கள். அதில் ஒருவன் கார் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்கிறான். இன்னொருவன் ஆறு வருசமா என்ன செய்யறான்னு யாருக்கும் தெரியாது. ஏதோ கல்யாணம் ஆகும் வரைக்கும் பில்டப் செய்து தீர வேண்டியிருக்கிறது பாவம் அவனுக்கும்.

இப்படியாகப்பட்ட ஊரில் விவசாயத்தின் மீதுள்ள நாட்டம் காரணமாகவும், வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிற தான் பிறந்து வளர்ந்த மண்ணைப் பிரிய இயலாத்தாலும் ஊரிலேயே இருக்கும் ஒரு இளைஞன் முத்து, நமது நாயகன். கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்தவன்.

வார லீவில் ஊருக்கும் வரும் பழனிச்சாமி பதினைந்து நாளாக திரும்பிப் போகாமல் ஊரைச் சுற்றியபடியே இருக்கிறான். அவன் வேலை பார்த்த திருப்பூர் பனியன் கம்பெனியில் லாங் லீவ் விட்டிருப்பதாகச் சொல்கிறான்.

நேற்று எர்ணாகுளத்தில் இருந்து மணியன் வந்திருந்தான். இவர்களை விட சின்னப் பையன். எட்டாவதுக்கு மேல் படிப்பு ஏறாமல் மலையாள தேசம் போய் கந்துக் கடை விரித்து நன்றாக செட்டில் ஆகி விட்ட பயல்.

மணியன் வந்த்தை ஒட்டி முத்துவின் தென்னந்தோப்பில் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஏற்பாடாகிறது. தோப்பின் நடுவே டிராக்டர். அதன் பின்னே டிரெய்லர். அதனுள்ளே முத்து, பழனிச்சாமி, மணியன் மூவரும் வட்டமாக உட்கார்ந்திருக்க அவர்களுக்கு மத்தியில் சரக்கும், அதற்குக் கடிக்க முறுக்கும், முத்துவின் டிரேக்டரில் எப்போதும் தயாராக இருக்கும் வாட்டர் பாட்டில் + எவர்சில்வர் டம்ளர் கூட்டணியும் உள்ளேன் அய்யா. இளமத்தியான நேரம். மணி 11 ஐ நெருங்குகிறது.

காட்சி 1:
பழனிச்சாமியின் டம்ளர் மட்டும் வேகமாகத் தீர்கிறது.

பழனி: (மணியனை நோக்கி) ஏண்டா இப்பவெல்லாம் அடிக்கடி வர்றது இல்ல?

மணியன்: எங்கண்ணா வர்றது? முந்தி மாதிரின்னா வந்துரலாம். இப்ப குடும்பம் குட்டீனு ஆகிருச்சு. அப்பறம் உங்கலையாட்ட பொச்சுக்கு பொறவாலயா இருக்கறேன்? (கொஞ்சம் இடைவெளி விட்டு) நீங்க வாராவாரம் வந்துருவீங்களாட்ட இருக்குது.

பழனி: இத்தன நாளு அப்படித்தான் வந்தண்டா. இனி முடியாது.

மணியன்: ஏன்னா? வேலை ஜாஸ்தியா? இல்லீன்னா திருப்பூர்ல எதாவது பிகர் செட் பண்ணிட்டீங்களா?

முத்து: (இடைமறித்து) டேய் சும்மா இருடா. அவனே எடஞ்சல்ல இருக்கான். நீ வேற கொடயாதே.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆளுக்கு நாலு மடக்கு குடித்து, புது முறுக்கு பொட்டலத்தையும் உடைக்கிறான் முத்து. அவர்கள் இருக்கும் இட்த்தை நோக்கி ஒருவர் நடந்து வருகிறார். மரமேறும் மூப்பன் அவர். தோளில் தொழிலுக்கான உபகரணமும், முதுகில் கத்தி வைக்கும் பொட்டியும் சூடி வருகிறார். நாற்பதைக் கடந்த வயது. ஐம்பதாக்க் காட்டுகிறது உடலும், முகமும். கயிறு உரசி முதுகு காய்த்திருக்கிறது.

மணியன்: அது நம்ம நல்லான் தான?

பழனி: ஆமாண்டா. பாரு. நேரா வந்து ஏனுங்க இப்படி பண்றீங்கம்பாம்பாரு.

அதே மாதிரி டிரெயிலருக்கு அருகில் வந்த்தும் வராத்துமாம நல்லான் பேசுகிறார்.

நல்லான்: உங்களைல்லா நம்பி எப்புடீங்க ஊருக்குள்ள இருக்கறது? உங்களுக்கே இது நல்லா இருக்குதா? பெரிய மனுசம்பெத்த புள்ளயாட்டவா இருக்குது நீங்க செய்றது?

முத்து: எல்லா நல்லாத்தே இருக்குது. ஏழு மணில இருந்து மரமேறீட்டு வந்து வெறு வயித்துல குடிச்சீன்னா கொடலு வெந்து போயிரும். அப்பறம் உம்பட இஸ்டம்.
காய் போடப் போன தோப்பில் மூன்று இளநீர் குடித்திருந்தார் நல்லான். அதைத் தவிர வேறொன்றும் சாப்பிட்டிருக்க மாட்டார் என்பது முத்துவுக்குத் தெரியும். அந்த ஊரில் அநேகமான கடின வேலைகள் அதிகாலை தொடங்கி பத்து பத்தரைக்குள் முடிந்து விடும். மறுபடி மாலை நாலு மணிக்கு மேல்தான்.

நல்லான்: (பொட்டி, கயிறு எல்லாம் கீழே கழட்டி வைத்து விட்டு டிரெயிலர் டயரில் காலை வைத்து உள்ளே ஏறியபடியே) நீங்கல்லாம் பொறக்கறதுக்கு மிந்தியே கள்ளு கட்டுனவன் நானு. நீங்க என்னமோ சொல்றீங்க. இது கூல் டிரிங்க்ஸாட்ட. இன்னொரு தம்ளாரு எடுத்து வெய்யிங்க.

நல்லான்: கேரளாக்காரரு வந்திருக்காங்க.. அதுனாலதான் எளமத்தியானத்திலயே ஆரம்பிச்சுட்டீங்களா?

மூவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்க்க, முத்து இன்னொரு டம்ளரை எடுத்து நீட்ட நல்லான் அதில் தானே பிராந்தியை ஊற்றுகிறார். எதையை கலக்காமல் அப்படியே வாயில் வைக்கிறார் நல்லான்.

பழனி: வாட்டர் பாட்டில் இருக்குது நல்லா(ன்). தண்ணி ஊத்தி மிக்ஸ் பண்ணிக்க.

நல்லான்: பாலாக இருந்தாலுந்சரி, பிராந்தியா இருந்தாலுந்சரி தண்ணீர் கலக்கினா ஒடம்புக்கு ஒத்துக்காதுங்க

ஊற்றியதில் பாதியை காலி செய்து விட்டு கீழே வைத்து விட்டு ப்ழனிச்சாமியைப் பார்த்து கேட்கிறார்.

நல்லான்: இன்னி உங்களுக்கு வேலை இல்லீங்க? எதாச்ச்சியும் தறிக்கிறி போட்டுக்குங்க. நெழல்லயே இருந்து பழகீட்டீங்க. காடு தோட்ட்த்துல போய் பாடுபடவா போறீங்க !
(பனியன் கம்பெனியில் வேலை போய் விட்ட்து என்பது மணியனுக்கு இப்போதுதான் தெரிகிறது)

மணியன்: வேல போயிருச்சான்னா? பத்து பன்னண்டு வருச சர்வீஸ். எதோ சூப்பர்வைசருன்னு சொன்னைல்லண்ணா?

பழனி: எல்லா இந்த சாயப்பட்டறை பிரச்சனடா. அதுக்கு முந்தி நல்லாத்தான் இருந்துது. ஏகதேசமா எல்லா யூனிட்டும் மூடிட்டாங்க.

முத்து: ஒதச்சுப்போடுவண்டா. யாருடா பிரச்சின பண்ணுனா? முப்பது வருசமா நொய்யல் ஆத்தையே நாசம் பண்ணீட்டானுக. அப்பவெல்லாம் ஒன்னுந்தெரியல. இப்ப இவனுகளுக்கு லாபம் வல்லீன்னா, வேல போச்சுன்னா மட்டும் வலிக்குது. குத்துது கொடையுதுனுக்கிட்டு. கம்பெனி ஓனர்கள உடுடா. உன்னையாட்ட வேலைக்குப் போன குடியானவனுகள ஒதக்கணும் மொதல்ல.

பழனி: மறுக்கா ஆரம்பிச்சிட்டியாடா? சித்தே கம்முனு இரு. (மணியனை நோக்கி) அப்பறம்டா மணியா.. எல்லா சவுக்கியந்தான?

மணியன்: பரவால்லீண்ணா. எட்டு லைன் போட்டிருக்கேன். இன்னோ 3 லைன் போடலானு ஐடியா பண்ணீட்டு இருக்கேன். பனண்டுருவா (12) ரொட்டேஷன்ல ஓடுது.

முத்து: டேய்.. உங்க உப்புசம் தாங்க முடியலடா சாமி. (கொஞ்சம் இடைவெளி விட்டு) இதெல்லா ஒரு பொழப்பாடா? ஊரு விட்டு ஊரு போய் வட்டிக்கு உட்டு சம்பாரிக்கறதுக்கு பொம்பள புரோக்கர் வேலை பாக்கலாம்.

பழனி: இவன் இப்படித்தான் ஒளறுவான்.. தானும் படுக்காம தள்ளியும்படுக்காம... நீ கண்டுக்காத மணியா. (முத்துவை நோக்கி) நீ இந்த ஊரு பொடக்காலியக் கூட தாண்டாட்டி யாருமே வெளிய போயி பொழைக்க்க்கூடாதாடா?

முத்து: (நக்கலாக) முத்தூட் பினான்ஸ், மணப்புரம் கோல்டுன்னு மலையாளத்தானுக நம்ம ஊர்ல வட்டிக்கு விட்டா இவனுக போய் கேரளாவுல கந்துக் கடை விரிக்கறானுக. என்னைய பொறுத்தவரைக்கும் அது ஒரு கேடுகெட்ட பொழப்பு.

உனக்கு பொறாமைண்ணா என மனதுக்குள் நினைத்தபடி அமைதியாக இருக்கிறான மணியன்.

நல்லான்: ஆளாளுக்கு அவியவிய பொழப்பப் பத்தி பேசுங்க எம்பொழப்ப மறந்துருங்க.  

பழனி:. உடு நல்லா(ன்). நம்ம காட்ல கள்ளு கட்டீரலாம். ஆளுக்கு ரண்டு குடுவை. மிச்சத்த நீ வித்துக்க. ஆனா போலீஸ் வந்துதுனு வெய்யி..

நல்லான்: எங்காட்டுல தெளுவு கட்டச்சொன்னேன். இந்த மூப்பந்தே கள்ளு கட்டி திருட்டுத்தனமா விக்கறான்னு சொல்லீருவீங்க. கவண்டீகள்ளா வெவரமுங்கோ..

முத்து: கள் எறக்கறது, கள்ளச் சாராயம் காச்சறது எல்லாம் சட்ட விரோதம். எது செஞ்சாலும் சட்டப்படி செய்யணும்

நல்லான்: (நடக்கும் விவாத்த்துக்கு சம்மந்தமே இல்லாமல்) ஏனுங்க அங்க பாருங்க மாரியப்பன.. பண்ணையத்துல இருந்தா அவனாட்ட இருக்கணுங்க.. அப்படி ஒரு பண்ணையத்துல சேர்ரதுன்னா நானெல்லா சம்பளமே கேக்க மாட்டனுங்க.

மணியன்: என்னமோ மேட்டர் இருக்குமாட்ட இருக்குது. ஊருக்கு அடிக்கடி வல்லீன்னா நாட்டு நடப்பே தெரிய மாட்டீங்குது.

பழனி: கெழபுறத்து தோட்ட்த்து கந்தசாமி அண்ணன் இருக்கார்ல அவரு துபாய் போனது உனக்கு தெரியும்ல. அவரு பண்ணையத்துல ஆரான்னு ஒரு பள்ளப்பையன் இருக்கான்.

நல்லான்: அகல உளுகறதுக்கு அவிய வெளிநாடு போய்ட்டாங்க. ஆரான் அவிய பண்ணையத்தை ஆழ உளுகறான்னா பாத்துக்குங்க..

மணியன்: பண்ணையத்தை மட்டுந்தேனா? (நக்கலாக)

நாலு பேரும் விவகாரமாக சிரிக்கிறார்கள்.

காட்சி 2:
மாலை 5 மணி. முனீஸ்வரன் கோவில் ஆல மரத்தடியில் ஊரே கூடியிருக்கிறது. இன்னும் பால் சொசைட்டி திறக்கவில்லை.

ஒருவர்: ஏப்பா கருப்பா. நல்லா கேட்டையா. 4 மணீன்னுதான் சொல்லி உட்டாங்களா?

நல்லசாமி என்கிற மூப்பன் நல்லான் ஆனது போல, ஆறுச்சாமி என்கிற பள்ளன் ஆரான் ஆனது போல கருப்புசாமி என்கிற நாவிதன் கருப்பன் ஆனான்.

கருப்பன்: நாலு மணிக்கு வந்துருவோம். ஊர்ல அல்லாரும் இருக்கோணும்னு கண்டிசனா சொல்லி உட்டாங்களுங்க. எசமாங்க சொன்னதத்தான் நான் சொன்னனுங்க. வந்துருவாங்களுங்க.. (கொஞ்சம் பளபளப்பாக இருக்கும் ஒருவரை நோக்கி) ஏனுங்க மச்சூட்டு கவண்டருங்க.. நம்ம கிட்ட எசமாங்க நம்பர் இருக்குமல்லவுங்க. வேணும்னா செல்போன்ல கூப்பிட்டு பாருங்களே.

மச்சு வீட்டுக்காரர்: அட நீ வேற ஏப்பா. அவிய வாரப்ப வரட்டும். நம்மளுக்கு எதுக்கு வம்பு?
(மிராசுதார், ஜமீன்தார் வழக்குகள் நாடெங்கும் ஒழிந்தாலும் கொங்குநாட்டில் குடியானவர்கள் முதல் கூலிக்கார்ர்கள் வரை அனைவரும் பயந்து மரியாதையோடு தொழும் பட்டக்கார்ர்கள் எல்லது எஜமான்கள் இன்னும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். சேரர் காலத்தில் கொங்கு நாடு 24 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் ஒரு பட்டக்காரர் நிர்வகித்த்தாகச் சொல்லப்படும் பிளாஸ்பேக் இந்த எபிசோடின் இரண்டாவது காட்சிக்கு முக்கியமானது)

ஒரு குடியானவர்: (மெதுவாக பக்கத்தில் இருப்பவரிடம்) மாடு பாதி வயித்தோடு இழுத்துக் கட்டீட்டு வந்துட்டேன். இன்னஞ்சித்த மேச்சிட்டு வந்திருக்கலாம்.

பக்கத்தில் இருப்பவர்: நீங்க வேற மாப்ள. நான் மூனரைக்கே பால் பீச்சீ பாலும் வல்ல ஒன்னும் வல்ல. கண்ணுக்குட்டிய அவுத்து உட்டுட்டு வந்துட்டேன்.

இந்த சமயத்தில் பொலீரோ, பஜீரோ, இன்னோவா என ஐந்தாறு வண்டிகள் வந்து நிற்கின்றன. அதில் ஒன்றிலிருந்து பட்டக்கார்ர் இறங்க மற்றதில் இருந்து ஆளுங்கட்சி வேட்பாளரும், அவரது அடிபொடிகளும் சற்று பவ்யமாகவே பின் தொடர்கிறார்கள். பட்டக்காரரைப் பார்த்து ஊர் மக்கள் அனைவரும் கையெடுத்து கும்பிடுகிறார்கள். அறுபது வயதுக்கு மேலான குடியானவக் கவுண்டர்கள் ஜப்பானிய சண்டைக்காரர்கள் போல இடுப்புக்கு மேல் முன்னால் குனிந்து கையை முன்னால் நீட்டி கும்பிடுகிறார்கள். மனிதனின் முதுகெலும்பு வயோதிகத்தில் அதிகபட்சமாக எவ்வளவு தூரம் முன்னோக்கி வளையும் என்பதை அங்கே அறிய முடிந்த்து. Old habits die hard for them. கர்வத்தோடு தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவர்கள் அணுகும் முறைக்கும், இப்போது அவர்கள் நடந்துகொள்வதற்கும் துளியும் தொடர்பில்லை.

பட்டக்கார்ர்: என்னப்பா எல்லாம் வந்துட்டீங்களா?

கும்பலாக பேசுகிறார்கள்.
வயதானவர் 1; சாமி நம்மூருக்கு வெகு நாளக்கப்பறம் வந்துருக்கறீங்க. நாங்க இவத்தாளையே இருந்துக்கிட்டு வராம இருப்பமுங்களா?

வாழைப்பழ சீப்பு, வெற்றிலை தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு என வைக்கப்பட்டிருக்கும் பெரிய தட்டை ஒன்னொரு பெரியவர் பவ்யமாக நீட்டுகிறார். பட்டக்காரர் அதை வாங்கி பக்கத்தில் நிற்கும் தன் சமையல்கார பண்டாரத்திடம் நீட்டுகிறார். அதன் பிறகு பேச ஆரம்பிக்கிறார்.

பட்டக்காரர்: இவரு ரத்தினம். ஆளுங்கச்சில எம்.எல்.ஏ எலக்சன்ல நிக்கறாரு. அவருக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்சரணும்.

வயதானவர் 1: நீஙக் என்ன சொல்றீங்களோ அப்படியே செய்யறமுங்க சாமி.

பட்டக்காரர்: அப்பறம் உங்களுக்கு எதாச்சும் கோரிக்கை இருந்தா சொல்லுங்க. இவரு நெறவேத்தி வெப்பாரு.

ஒரு பெண்: தண்ணி டேங்க் இருக்குதுங்க. நல்ல மொறையா வேலை செய்யறது இல்லீங்க. பாதி நாள் தண்ணி வாரதே இல்லீங்க.. பாத்து செஞ்சு குடுக்கச் சொல்லுங்க சாமி

வேட்பாளர்: ஆட்சிக்கு வந்த உடனே பாக்கறேங்கம்மா

பட்டக்கார்ர்: அடையாளந்தெரியல.. (மேக்காலக்காட்டு குமாரமி மருமக என்று கூட்டத்தில் சொல்கிறார்கள்) ஓ.. நீயா.. ஏம்மா. இதெல்லாமா எம்.எல்.ஏ பாப்பாரு? ஆத்தோரமா இருக்கற ஊரு. நாம போயி தண்ணி ஒரு பிரச்சினைனு பேசிக்கிட்டு. நீங்களே ஒரு ஆள ஏற்பாடு பண்ணி டேங்க சுத்தம் பண்றது மோட்டார் போட்டு உடறது பாத்துக்கணும், சரியா?

அந்தப் பெண்: சேரிங்க.

முத்து: ஆத்துல மணல் எடுக்கறத தடுக்கணும்ங்க. எல்லா மண்ணையும் அள்ளீர்ராங்க. வேடையில தண்ணியே நிக்க மாட்டீங்குது. மிந்தியெல்லாம் ஊத்து பறிச்சா ரண்டு மூனு மாசம் தாங்கும், இப்ப வெறும் பாறைதான் இருக்குதுங்க. நீங்க எம்.எல்.ஏ ஆனா என்ன நடவடிக்கை எடுப்பீங்க?

வேட்பாளர்: எங்க தலைவர் சொல்றதையே நானும் சொல்றேன். சட்டவிரோதமா மணல் அள்றத தடுப்போம். மணல் கொள்ளையர்களை தண்டிப்போம்.

முத்து: சட்ட வீரோதமா அள்றது சரிங்க.. சட்டப்படி அரசாங்கமே அள்ளுதே.

வேட்பாளர்: மணல் மாஃபியாவை வேற எப்படி தம்பி தடுப்பீங்க?

முத்து: ஏங்க மணல் அள்றது தப்பு. அதனால நிலத்தடி நீர் மட்டம் குறையுது. கோடை காலத்துல கெணறு எல்லாம் முன்னை மாதிரி இல்லாம வத்திப் போகுது. ஆத்துல தண்ணி ஓடற ஆறு மாசம் சரி. அப்பறம் அப்படியே மொட்ட மண்டையாட்ட காஞ்சு போகுது. ஒரே பாறைதான் இருக்குது. எப்படீங்க தண்ணி தேங்கும்?

வேட்பாளர்: தம்பி.. ஒன்னு புரிஞ்சுக்குங்க. நம்ம தொகுதில யாரும் மணல் அள்ளாம இருக்க நான் கேரண்டி. கரூர் பக்கத்துல அள்ளுனா அது நம்ம கட்டுப்பாட்டுல வராது.

முத்து: (கொஞ்சம் மிரட்டலான தொனியில்) உங்க தலைவர் கிட்ட சொல்லி அமராவதி ஆத்துல மணல் அள்ளவே கூடாதுன்னு சொல்லுவீங்களா? அப்படீன்னா சொல்லுங்க ஓட்டுப் போடறோம். இல்ல அதெல்லாம் முடியாது அது நம்ம கட்டுப்பாட்டுல இல்லைன்னு சொன்னீங்கன்னா எங்க ஊர்க்காரங்க எல்லாம் மெட்ராஸ் வந்து உங்க வீட்டு முன்னால் உக்காந்துக்கிட்டு உங்க கை கால் எல்லாம் கட்டிப் போட்டு உங்க பேர்ல அறிக்கை விட்டுருவோம்.

பட்டக்காரரின் முகம் மாறுகிறது. கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.

வேட்பாளர்: என்னன்னுப்பா?

முத்து: இனிமேல் தமிழகமெங்கும் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தவிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் மணல் அள்ளி தமிழ்நாடு மற்றும் கேராள முழுவது சப்ளை செய்ய சட்ட சபையில் தீர்மானம் கொண்டு வருவேன் அபடீன்னு.

பட்டக்காரர் அதற்கு மேல் நிற்க விரும்பவில்லை.

பட்டக்காரர்: அதெல்லாம் செய்வாரு. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைங்க.
(எல்லோரையும் கும்பிட்டு விட்டு கிளம்புகிறார். பின்னாலேயே வேட்பாளரும் கிளம்ப, நல்லான் சத்தமாக குரல் கொடுக்கிறார்)

நல்லான்: ஏனுங்க. அப்படியே இன்னொரு வேண்டுதலைங்க. கள் எறக்க எதாவது ஏற்பாடு செஞ்சு குடுப்பீங்களா?

வேட்பாளர்: சட்ட விரோதமாக கள் எறக்க, சாராயம் காச்ச அனுமதி கெடைக்காதுன்னு நினைக்கிறேன்.. (என்றபடியே நடக்கிறார்)

நல்லான்: (தனக்குத்தானே) மணல் அள்றது சட்டப்படி செய்யலாம், டாஸ்மாக் சட்டப்படி விக்கலாம். அவனவன் செஞ்சா தப்பு அரசாங்கம் செஞ்சா சரி. இனிமே அவனவன் பொண்டாட்டிய அவனே இது பண்ணா கூட சட்ட விரோதம் அரசாங்கம் பண்ணாதான் சட்டப்படி சரின்னு சொல்லுவாங்களாட்ட இருக்குது.

காட்சி 3:

முத்துவும், நல்லானும் ஒரு மாலை நேரத்தில் ஆற்றோரமாக நடந்து போகிறார்கள். நாணல் புதரில் இருந்து பரிமளா போகிறாள். வயது முப்பந்தைந்தில் இருந்து நாற்பதுக்குள் இருக்கும். துபாய்க்கார கந்தசாமியின் பொண்டாட்டி. முந்தானையை சரி செய்தபடி போகிறாள். முகத்தில் ஒரு வித திருப்தியோடு நடை போடுகிறாள்.

அவள் போன ஓரிரு நிமிட்த்தில் புதரில் இருந்து வெளியே லுங்கியை சரிசெய்தபடி ஆரான் வருகிறான். நல்லானையும், முத்துவையும் பார்த்து விடுகிறான். ஒரு கணம் செய்வதறியாது திகைத்தவன் இயல்பு நிலைக்கு உடனே வந்து விடுகிறான்.

நல்லான்: டேய் ஆரா. என்னடா பண்றீங்க ரண்டு பேரும்?

முத்து: இத்தன நாள் கேட்டதுக்கு பூனை பிய்ய மூடி வெச்ச மாதிரி மழுப்பிக்கிட்டே இருந்தே. இன்னைக்கு மாட்டினியா!

சுமார் 25 வயதுள்ள ஆறுச்சாமி லேசாக வெட்கப்படுகிறான்.

நல்லான்: ஏண்டா.. நீ என்ன சனம்?. அவிய என்ன சாதி?. இப்படி மொற தவறி .. வெளில தெரிஞ்சா நல்லாவாடா இருக்கும்?

ஆரான்: அப்ப ஒரே சாதில இப்படி நடக்கலாமுங்களா?

நல்லான்: இருந்தாலும் உம்பட வயசென்ன அவிய வயசென்ன? நீ கல்யாணம் ஆகாதவன்.. அவிய குடும்ப பொம்பள..

ஆரான்: ஏனுங்க பண்றதுன்னா ஆனதுக்கப்பறம் மொறதவறி பண்றது வேற மொறையோட தாலி கட்டி பண்றது வேற.. போங்க நீங்க..

இருவரும் முறைக்கிறார்கள்.
**********

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் க

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் ப