Monday, January 22, 2007

நம்ம ஊரு...நல்ல ஊரு...

அய்யாமார்களே,அம்மாமார்களே...

உங்களது கோவை தினங்களை நினைவு படுத்தும் விதத்துல இந்த ஒரு போட்டி.

1.கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட ஒன்றைப் பிரிக்கவும்
அ)கிருஷ்ணா ஸ்வீட்ஸ்
கணபதி சில்க்ஸ்
அடையார் ஆனந்த பவன்
சென்னை சில்க்ஸ்

ஆ)கற்பகம்
நிர்மலா
அவினாசிலிங்கம்
விசாலட்சி

2."செவன் இஸ் ஹெவன்" என்றெல்லாம் சரித்திரப் புகழ் வாய்ந்த 7-ஆம் நெம்பர் பேருந்து செல்லும் பாதையில் உள்ள வழித்தடங்களைக் கூறவும்.

3.ஹோப் காலேஜ் : கோவையிலிருந்து அவினாசி மார்க்கமாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு முக்கிய சந்திப்பு.இந்தப் பகுதியினைச் சுற்றிலும் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்தப் பகுதிக்கு "ஹோப் காலேஜ்" என்ற பெயர் வந்தது?

4.இணைந்த கைகள் வெளியானதால்,மூடப்பட்ட திரையரங்கம் எது?

5.கோவையில் தொடங்கி மற்ற நகரங்களிலும் வெற்றிக் கொடி கட்டி இருக்கும் வியாபார நிறுவனங்கள் 4 கூறவும்.

6."இணையாத பாலம்.இருந்தென்ன லாபம்" - சமீபகாலத்தில் பிரபலமான இந்த ஸ்லோகன் எந்த பிரச்சினையை நினைவூட்டுகிறது??

Wednesday, January 17, 2007

4:நம்ம ஊரு சமையலேய்...

பச்சைக் கொள்ளு ரசம்

தேவையான பொருட்கள்
கொள்ளு - கால் கிலோ
புளிக்கரைச்சல் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

  1. கொள்ளை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. குக்கரில் வேகவைத்து எடுத்து மசித்து கொள்ளவும்.
  3. ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வருத்துகொள்ளவும்.
  4. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் புளிக்கரைச்சலை ஊற்றவும்.
  5. 4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  6. மசித்து வைத்த கொள்ளுவை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
  7. நன்கு கொதி வந்ததும் இறக்கி வைத்து பறிமாறவும்.
  8. சளி,காய்ச்சலுக்கு சிறந்த மருந்து இது.

Friday, January 12, 2007

3:சிறுதுளி பெருவெள்ளம்

பானீ,வெள்ளம்,ஜல்,நீரு,நீலு என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கப்படும் நீரின்றி அமையாது உலகு.அது சரி வெறுங்கையில் முழம் போட முடியுமா? மழை இன்றி இவ்வுலகின் நீர் ஆதாரங்கள் தான் செழிக்குமா?

ஆறு,ஏரி,குளம்,கிணறு,ஓடை,அருவி என்று இந்த உலகிலுள்ள பல்வேறு நீர்வளங்களுக்கு மழையே ஆதாரம்மழை பெய்யாமல் பொய்க்கும்போது தான் அதனுடைய அருமையை உணர்வோம்.சிறுவாணி,புழல் ஏரிகளின் தற்போதைய நீர்வரத்து,அடிப்பம்பு,லாரித் தண்ணீர்,மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்று ஆயிரம் விஷயங்களைப் பேச,சிந்திக்கத் துவங்குவோம்..பணத்தைப் பல தலைமுறைகளுக்குச் சேமித்துவைக்கத் துடிக்கும் நாம்,நீர் போன்ற இயற்கை வளங்களைப் பொறுத்த மட்டிலும் அவற்றின் மதிப்புணரா தற்குறிகளாய் இருக்கிறோம்.இதே நிலைமை நீடித்து வந்தால் அடுத்த உலகயுத்தம் நீரின் முன்னிட்டே இருக்கும் என்று கூற முடியும்.யார் கண்டது,இந்தியாவே அது போன்றதொரு யுத்தம் துவங்குமிடமாய் இருக்கக் கூடும்.

ஐ.நா. சபையின் உலக நீர்ப்பயன்பாட்டு அறிக்கையின் படி தற்போது உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள்கூட்டம் ஏறத்தாழ பூமியிலிருக்கும் 54 % தூயநீரினைப் பயன்படுத்தி வருகிறது.2025 ஆம் ஆண்டில் இது 70% ஆக அதிகரிக்கக்கூடும்.தனிமனித நீர்ப்பயன்பாடு தற்போதைய விகிதத்தில் அதிகரித்து வருமாயின் இன்னும் 20 வருடங்களில் மனித சமுதாயம் உலகிலுள்ள 90% நீர்வளங்களைக் காலியாக்கிவிடும்.அடுத்து வரும் இருபதாண்டுகளில் பெருகிவரும் மக்கள்தொகையும் அதனையொட்டி அதிகரிக்கும் நுகர்வுத்தேவைகளும் மேற்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளைத் தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாக்கி விடும்.மரம் வெட்டுவதால் மழை குறைகிறது.மழையில்லாமல் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் வயிற்றுப்பாட்டிற்கு வேலை தேடி நகருக்குப் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திட்டமிடப்படாத,கட்டுப்படுத்தப்படாத நகர் புறப்பெருக்கம் அங்குள்ள இயற்கை வளங்களை அழித்து விட்டே நடக்கிறது.என இது ஒரு சுழற்சியான நிகழ்வு.

இந்த நகர்புறப்பெருக்க நிகழ்வுக்கு "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோவை மட்டும் விதிவிலக்கா என்ன? சுவையான சிறுவாணி நீருக்குப் பெயர் போன கோவையில் மரம் வளர்ப்பு/பராமரிப்பில் உள்ள தொடர்ச்சியான புறக்கணிப்பு,நீர்வளங்களின் மீதான ஆக்கிரமிப்பு,மோசமான பராமரிப்பு காரணமாய் வெகுவிரைவில் ஒரு தண்ணீர்ப்பஞ்சம் திணிக்கப்பட உள்ளது.சிங்காநல்லூர் குளத்தேரியினைக் கடந்து செல்லும் போதெல்லாம் இந்தக் குளத்தின் இன்றைய மோசமான நிலமைக்கு நாமும் ஒரு காரணம் என்று ஆதங்கப்படுவதோடு இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையும் வெகுவாய் இருந்து வந்தது.சிறுதுளி திட்டத்தினைப் பற்றி அறியும் வரையில்.

சிறுதுளிகள் சேர்ந்து உருவாவதே பெருவெள்ளம்.அதுபோல கோவையின் எக்கோஸிஸ்டத்தினைப் புத்துயிரூட்டும் வண்ணம் திருமதி.வனிதா மோகன்(ப்ரிகால்) அவர்களின் சீரிய முயற்சியினால் உருவாக்கப்பட்டதே இந்த சிறுதுளி திட்டம்."தூய்மையான கோவை,பசுமையான கோவை" என்னும் கொள்கைகளுடன் உருவானதே இந்த சிறுதுளி திட்டம்.

இந்தத் திட்டமானது திரு.S.V.பாலசுப்ரமணியம்(CMD,பண்ணாரி அம்மன் சுகர்ஸ்)அவர்களைச் சேர்மனாகவும்,மருத்துவர் R.V.ரமணி(சங்கரா கண் மருத்துவமனை),ரவி சாம்,ஆரதி வரதராஜ்,கனக்லால் அபய்சந்த்,N.V.நாகசுப்ரமணியம் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிறுதுளி ட்ரஸ்டியினால எடுத்து நடத்தப்படுகிறது.பெரிய அளவிலான மழை நீர் சேகரிப்பு,திட/திரவக் கழிவுகள் மேலாண்மை,ஆறு/குளம்/ஏரி போன்ற நீர் வள ஆதாரங்களின் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,அவற்றினைத் தூர்வாரல்,கரைகளை செப்பனிடுதல்,பெரிய அளவிலான மரப்பெருக்கம் என்று தனது இலக்கினை அடைய வெவ்வேறு களங்களில் பயணிக்கிறது இந்த சிறுதுளி திட்டம்.

கிருஷ்ணாம்பதி,செல்வம்பதி,முத்தண்ணன்குளம்,செல்வமுத்தண்ணன் குளம்,பெரிய குளம்,சின்ன குளம்,வாலன் குளம்,சிங்காநல்லூர் குளத்தேரி போன்றவை கோவையிலுள்ள சில முக்கிய குளங்கள்.நகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இந்தக் குளங்கள் நிலத்தடியே உள்ள கால்வாய்களால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.நாளடைவில் பல்வேறு காரணங்களால் இந்தக் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாய் மழைநீரானது குளங்களுக்கிடையே சீராகச் செல்ல இயலாமற்போனது.சில கால்வாய்களின் மேலே நிகழ்ந்த ஆக்கிரமிப்பு,கால்வாய் குளங்களை இணையும் இடத்தில் ஏற்பட்ட பிளாஸ்டிக் அடைப்புகள் போன்றவற்றின் காரணமாய் மழை நீர்வெள்ளமானது எதிர்த் திசையில் பெருகி ஓடி, பல இடங்களை வெள்ளக்காடாக்கிய நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்றே.

கோவை மக்களிடையே விழிப்புணர்வையும்,இந்தத் திட்டத்தினால் விளையும் நீண்டகால நன்மைகளையும்,முக்கியமாக நம்மால் முடியும் என்ற நம்பிக்கையினையும் புகுத்த கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சிக்கூடத்திற்கு அருகே உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தினைத் தூர் வாரும் பணி முதலில் மேற்கொள்ளப்பட்டது.108 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் ஏறத்தாழ 30% ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததது.தூர் வாருதல் முடிந்தபின்னர் மேலும் ஆக்கிரமிப்புகள் நேராவண்ணம் கரைகளை உயர்த்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்தக் குளத்தினை நோக்கிச் செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்பட்டன.சிறுதுளியின் முதல் துளி இது தான்.பிறகு நடந்ததெல்லாம் வரலாறு தான்.

இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கிய இலக்கான பெரும் மரப்பெருக்கத்தினை அடைவதன் முதல் படியாகச் சுமார் 1 இலட்சம் மரக்கன்றுகள் பெரியகுளம்,கிருஷ்ணம்பதி போன்ற குளங்களின் கரைகள்,ராம் நகர்,ஹோப் காலேஜ் போன்ற இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.பசுமைப் பயணம் என்னும் இந்த நிகழ்வானது நமது குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களால் 6,ஜூலை,2005-ல் துவங்கி வைக்கப்பட்டது. கோவையிலுள்ள பள்ளிச் சிறார்களிடையே மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறது.தற்போது நொய்யல் ஆற்றினைச் சுத்திகரிப்பதில் பெரும் முனைப்புடன் இயங்கி வருகிறது சிறுதுளி திட்டம்.

இப்படியாகக் கோவையின் எதிர்காலமானது சத்தமின்றி மாற்றியமைக்கப் பட்டுவருகிறது.
இந்தத் திட்டம் பற்றி மேலதிக விவரங்களுக்கு http://www.siruthuli.org/

"தூய்மையான கோவை,பசுமையான கோவை"

2: கொங்குதேசம்

கொங்குதேசம் அல்லது கொங்குநாடு''ன்னு பொதுவா சொல்றது, கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தையே பெரும்பாலும் குறிச்சாலும், அதன் பரப்பளவு கொஞ்சம் விஸ்தாரமானதுங்க. இன்னைக்கு பல்வேறு மாவட்டங்களா தாலுக்காவா பிரிஞ்சிருக்கிற 'பழநி, தாராபுரம், கரூர், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், ஈரோடு, தர்மபுரி, சத்யமங்கலம், நீலகிரி, அவிநாசி, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, இப்படி எல்லா ஊர்களையும் உள்ளடக்கியது தான் கொங்குநாடு.தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டிய மன்னர்கள் மட்டுமில்லாம, ஹவுசல்ய மன்னர்களும் முகம்மதிய மன்னர்கள் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த கொங்குதேசம், 1799ல திப்புசுல்தானோட வீழ்ச்சிக்கு அப்புறம் கிழக்கிந்தியகம்பெனியின் துனையோட மைசூர்மஹாராஜா'வோட ஆள்கைக்கு உடபட்டு இருந்ததுச்சுங்க.
அப்புறம் மொத்தமாக ஆங்கிலேயர்களின் கட்டுபாட்டுக்கு வந்து 1804ல ஒரே மாவட்டமாக ஒரே மாவட்டஆட்சியரோட அதிகாரத்துக்கு வந்துச்சுங்க.
பிற்ப்பாடு பல்வேறு ஆட்சி காரணங்களுக்காக, அது பல மாவட்டங்களா, தாலுக்காவா பிரிக்கப்பட்டது. இன்னைக்கு பல்வேறு தனிதனி அடையாளங்களோட இந்த ஊர்கள் இருந்தாலும், இன்னமும் அந்த 'கொங்குவாசம்' எல்லா ஊர்லயும் மிச்சமிருக்குதுங்க.

கொங்குநாடு'ங்கிற பேரு 'கொங்கு' அதாவது 'தேன்'ங்கிற வார்த்தையில இருந்து வந்ததாக சொல்றாங்க. (பள்ளிகூடத்துல படிச்ச 'கொங்குதேர் வாழ்க்கை..' ஞாபகம் இருக்குதுங்களா?). தேனீக்கள் நிறைஞ்ச பூஞ்சோலைகள் அடர்ந்த இடம்ன்னும், தேனீக்கள் போல சுறுசுறுப்பாக உழைக்கும் மக்கள் நிறைந்த இடம்ன்னு, ஓவ்வொருத்தரும் அவங்க அவங்க ஆசைக்குக்ம், கற்பனைக்கும் தகுந்த மாதிரி விளக்கமும் கொடுக்கறாங்க.

சில வரலாற்று ஆசிரியர்கள் இதையே வேற மாதிரியும் சொல்றாங்க. காங்கேயம்'ங்கிற ஊரை (காங்கேயம் காளை கேள்வி பட்டிருப்பீங்களே) தலைநகரா வச்சு அதை சுத்தியுள்ள பிரதேசத்தை காங்கேயநாடு அல்லது கங்கநாடு'ன்னு சொல்லபோயி, அது நாளைடைவில பெயர் மறுவி 'கொங்குநாடு'ன்னு ஆயிட்டதா சொல்றாங்க.

தமிழகத்தோட ஜீவநதியான காவேரியும், அந்த காவேரிக்கு தமிழகத்துல வலு சேர்க்கிற நொய்யல், பவானி, அமராவதி'ங்கிற பல ஆறுகள் குறுக்கே பாயற பிரதேசம்ங்கிறதால, கொஞ்சம் செழிப்பான பிரதேசமாத்தாங்க கொங்குதேசம் இருந்திருக்கு. இன்னைக்கு நம்மூர் ஆத்துல எல்லாம் தண்ணிய விட மணல்லாரி தான் ஜாஸ்த்தி ஓடுதுங்கிறது தான் உண்மைன்னாலும், முன்னே ரொம்ப செழிப்பா இருந்த்திருக்கு. இப்பவும் தமிழகத்தின் செழிப்பான பகுதிகள்ல கொங்குதேசத்துக்கு உட்பட்ட இடங்கள் தான் பிராதணமானது. இதை வச்சு தான்.
" கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்.
கொங்கில் வாழான் எங்கும் வாழான் "ன்னு எல்லாம் முன்ன சொல்லிவச்சாங்க போல.

சங்ககாலத்துல இருந்து இருக்கிற கொங்குதேசத்தோட வரலாற, அவ்வளவு சுளுவா ஒரு நாலு பத்தியில சொல்லமுடியாதுதான். இருந்தாலும் ஒரு ஆர்வத்துல எழுதியாச்சு. யாராவது கொங்குவரலாற்றுல ஆர்வமிருக்கிறவங்க இருந்தா, அப்படியே நூல் புடிச்சு உசரமா பறக்க விடுங்க பார்க்கலாம்.. :)

1:வணக்கம்ங்க..!
'நம்மூர்ல மழைங்களா?'

எங்கயாவது ஒரு இடத்துல கொங்குநாட்டை சேர்ந்த ரெண்டு பேர் சந்திச்சுகிட்டாங்கன்னா கேட்டுக்கிற முத கேள்வியே இது தாங்க..
'ஊர்ல மழையா?ங்கிற கேள்விக்குப்பொறவு தான் 'வூட்ல அம்மிணி/மச்சான் குழந்தைக எல்லாம் செளக்கியமா?ங்கிறது. அந்தளவுக்கு மழையயும் விவசாயத்தையும் பெரிய அளவுல நம்பி வாழற மக்கள் நிறைஞ்ச இடம்ங்க கொங்குதேசம்.

இப்போ எல்லாம் வாழ்க்கை முறைக கொஞ்சம் மாறிப்போயி, ஊரு உலகம் பூராவும் பறந்து வாழப்போயிட்ட மக்கள் கூட்டம் பெருகிபோனப்பவும், எங்கயாவது ஒரு நிமிசநேரம் மாடிப்படியில எதுக்கஎதுக்க பார்த்துக்கும் போதோ, 'மால்'ல வேடிக்கை பார்க்கும் போதோ, யாஹூ'விலயும் கூகிள்டாக்'லயும் ஒரு ஹாய் சொல்றப்பவும்கூட 'ஊருக்கு பேசுனயா? மழையாமா?'ன்னு சட்டுன்னு முத கேள்வியா வந்து விழுகற அந்த கேள்வி, கொங்குதேசத்துலயே தன்னோட வேரை இன்னும் விட்டு வச்சிருக்கிற ஆளுகள படம் புடிச்சு காட்டிரும்ங்க.. (அப்பா..! ஒரு வழியா தலைப்புக்கு பெயர்க்காரணம் சொல்லியாச்சு..!)


மழை பேய்யறது, காத்தடிக்கிறது எல்லாஞ்சரி, இதென்ன புதுசா 'கொங்குவாசல்'?

- இங்க பாருங்க, கேள்வி கேக்கிறது சுளுவான விசயம்ங்க, ஆனா ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல, இங்க கழுத்துக்கு மேல எங்கயோ ஒரு மூலையில அமைதியா ஒளிஞ்சிட்டிருக்கிற மூளைய தேடிப்புடிச்சு எடுத்து, கசக்கி, பதில் சொல்றதுங்கிறது சாதாரணமான சமாச்சாரம் கிடையாதுங்க.. இருந்தாலும் நீங்க கேட்டுட்டீங்க.. சொல்லிடறோம்.


கொங்குவாசல் - பளீர்ன்னு நெத்திபொட்டுல அடிக்கிற மாதிரி ஒரே வரியில சொல்லனும்ன்னாங்க, 'இங்கு கொங்கு சம்பந்தப்பட்ட அனைத்தும் தொகுக்கப்படும்/எழுதப்படும்' அம்புட்டுதானுங்க விசயம்.

யாரு எழுதுவாங்க..?

- நல்ல கேள்வியா இருக்குதுங்க இது.. யாரு எழுதுவாங்க? நம்மதான்.. கொங்கு தேசத்துக்காரன்னு பெருமையா சொல்லிகிட்டு குசும்போட திரியற நம்மள விட்டா வேற யாருங்க இதெல்லாம் எழுதுவாங்க. நம்ம தான் எழுதப்போறோம். கொங்குதேசத்தை சேர்ந்த/சார்ந்த யாரு வேணும்னாலும் எழுதலாம்ங்க. அத்தனை பேருக்கும் இந்த, அதென்னங்க சொல்லுவாங்க.. ஆங்.. கடவுசொல்' அந்த கடவுசொல்லை குடுக்கறதுங்கிறது சாத்தியமில்லைங்கிறதால, அந்த சம்பிரதாயத்தையெல்லாம் கவனிச்சுக்க மட்டும் ஆளுக இருக்காங்க. மத்தபடி யாரு வேணும்னாலும் எழுதலாம்ங்க. கொங்குதேசத்துக்காரன் தான் எழுதனும்னு ஒரு வரையராவும் கிடையாதுங்க, எழுத நினைக்கிற யாரு வேணும்னாலும் எழுதலாம்ங்க.

என்னத்த எழுதறது ?

-எதை வேணும்னாலும் எழுதலாம்ங்க, கட்டுரை, கதை, கவிதை, சாதனையாளர்கள் குறிப்பு, சமையல்குறிப்பு, செய்திகுறிப்பு, நினைவுகுறிப்பு, சரித்திரகுறிப்பு'ன்னு குறிப்பிட்டும் எழுதலாம், நவீனம், பின்நவீனம், முன்நவீவனம்ன்னு குறிப்பில்லாமயும் எழுதலாம். ஆனா பாருங்க, நீங்க எழுதற சமாச்சாரத்துல 'கொங்கு'வாசம் கொஞ்சமாச்சும் இருக்கனும், அதை மட்டும் இப்பவே கண்டீசனா சொல்லிடறம்ங்க. (அந்த வாசம் சரியா இருக்குதான்னு பாக்கிறதுக்குன்னு ஒரு ரெண்டு மூணு காலபைரவ சாமிக இருக்குதுங்கோவ்)

எப்படி எழுத ?

-நீங்க உங்களுக்கே உங்களுக்குன்னு சொந்தமா ஆத்துக்கு கிழக்கால, வாய்க்காலுக்கு மேவறமா, இட்டேரிய ஒட்டினாப்புல சொந்தமாவோ இல்ல குத்தகைக்கோ வச்சிருக்கீங்களே மூணு கல்லு அளவுல, 'வலைப்பூ'ன்னு ஒண்ணு, அதுல எழுதிட்டு நமக்கு மயில'ண்ணன் மூலமா சேதி சொல்லிவிட்டாலும் சரிங்க, இல்லாட்டி நமக்கே நேரடியா உங்க சரக்கை அனுப்பிவச்சாலும் சரிங்க. எப்படியாவது ஒரு வகையில உங்களோட பங்களிப்பை ஆற்றிடுங்க.:)

வூடு கட்டி, வாசல் திறந்து வச்சாச்சு, முத வேலையா நம்ம கையால ஒரு பதிவு எழுதி கிரகமெல்லாம் கழிச்சாச்சு.. இன்னும் என்ன பார்த்துட்டு இருக்கீங்க..

சம்முகம்.. உட்றா போகட்டும்ம்...

ஸ்டார்ட்ட் ம்மீசிக்..