தீபாவளி,பொங்கலுக்கு அடுத்து ஆவலோட எதிர்பார்த்திட்டு இருக்கிற நோம்பி இந்த ஆடி நோம்பி தான்.காவிரி சூலூர் பக்கம் பாயலைங்கறதுக்காக ஆடி நோம்பியைக் கொண்டாடாம இருக்க முடியுமா??மே மாசம் பள்ளிக்கூடம் ஆரம்பிச்ச பின்னாடி வர்ர மொத லீவு இந்த ஆடி நோம்பிக்குத்தான்.இது தான் முக்கிய காரணமின்னாலும் தூரியாடறது,பட்டம் உடுறது,தேங்காயை வாட்டி சாப்பிடறதுன்னு இந்த நோம்பியை எதிர்பார்த்திட்டு இருக்க இன்னும் பல காரணங்கள் இருக்கு. ஆடி 18 என்ன கெழமை வருதுன்னு அப்பா ஒரு மாசம் முன்னாடி பார்த்து சொல்லுவாரு.எங்க அத்தை ஊட்டுக்குப் போறதா இல்லை அவங்க இங்க வருவாங்களான்னு ஒரு பத்து நாளைக்கு வீட்டில பெரியவங்க டிஸ்கஷன் பண்ணுவாங்க.முடிவென்னமோ எப்பயும் போல அவங்க இங்க வருவாங்கன்னு தான் எடுப்பாங்க.அப்புறம் வழக்கம் போல எங்க அத்தை,மாமாவை நோம்பிக்குக் கூப்பிட எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் போயிட்டு வருவாரு. அம்மியே பறக்கர மாதிரி அடிக்கற ஆடிக்காத்தில தூரி கட்டி ஆடாட்டி அப்புறம் அந்தக் காத்துக்கு என்ன மருவாதை?நோம்பிக்கு முன்னாடியே, வெள்ளிக்கெழமை சந்தையில போயி தண்ணி சேர்ந்திற கயிறு வாங்கிட்டு வந்து வச்சிருப்பாரு.எனக்கு ஒண்ணு,ஒடம்பொறப்ப...