Skip to main content

1:வணக்கம்ங்க..!




'நம்மூர்ல மழைங்களா?'

எங்கயாவது ஒரு இடத்துல கொங்குநாட்டை சேர்ந்த ரெண்டு பேர் சந்திச்சுகிட்டாங்கன்னா கேட்டுக்கிற முத கேள்வியே இது தாங்க..
'ஊர்ல மழையா?ங்கிற கேள்விக்குப்பொறவு தான் 'வூட்ல அம்மிணி/மச்சான் குழந்தைக எல்லாம் செளக்கியமா?ங்கிறது. அந்தளவுக்கு மழையயும் விவசாயத்தையும் பெரிய அளவுல நம்பி வாழற மக்கள் நிறைஞ்ச இடம்ங்க கொங்குதேசம்.

இப்போ எல்லாம் வாழ்க்கை முறைக கொஞ்சம் மாறிப்போயி, ஊரு உலகம் பூராவும் பறந்து வாழப்போயிட்ட மக்கள் கூட்டம் பெருகிபோனப்பவும், எங்கயாவது ஒரு நிமிசநேரம் மாடிப்படியில எதுக்கஎதுக்க பார்த்துக்கும் போதோ, 'மால்'ல வேடிக்கை பார்க்கும் போதோ, யாஹூ'விலயும் கூகிள்டாக்'லயும் ஒரு ஹாய் சொல்றப்பவும்கூட 'ஊருக்கு பேசுனயா? மழையாமா?'ன்னு சட்டுன்னு முத கேள்வியா வந்து விழுகற அந்த கேள்வி, கொங்குதேசத்துலயே தன்னோட வேரை இன்னும் விட்டு வச்சிருக்கிற ஆளுகள படம் புடிச்சு காட்டிரும்ங்க.. (அப்பா..! ஒரு வழியா தலைப்புக்கு பெயர்க்காரணம் சொல்லியாச்சு..!)


மழை பேய்யறது, காத்தடிக்கிறது எல்லாஞ்சரி, இதென்ன புதுசா 'கொங்குவாசல்'?

- இங்க பாருங்க, கேள்வி கேக்கிறது சுளுவான விசயம்ங்க, ஆனா ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல, இங்க கழுத்துக்கு மேல எங்கயோ ஒரு மூலையில அமைதியா ஒளிஞ்சிட்டிருக்கிற மூளைய தேடிப்புடிச்சு எடுத்து, கசக்கி, பதில் சொல்றதுங்கிறது சாதாரணமான சமாச்சாரம் கிடையாதுங்க.. இருந்தாலும் நீங்க கேட்டுட்டீங்க.. சொல்லிடறோம்.


கொங்குவாசல் - பளீர்ன்னு நெத்திபொட்டுல அடிக்கிற மாதிரி ஒரே வரியில சொல்லனும்ன்னாங்க, 'இங்கு கொங்கு சம்பந்தப்பட்ட அனைத்தும் தொகுக்கப்படும்/எழுதப்படும்' அம்புட்டுதானுங்க விசயம்.

யாரு எழுதுவாங்க..?

- நல்ல கேள்வியா இருக்குதுங்க இது.. யாரு எழுதுவாங்க? நம்மதான்.. கொங்கு தேசத்துக்காரன்னு பெருமையா சொல்லிகிட்டு குசும்போட திரியற நம்மள விட்டா வேற யாருங்க இதெல்லாம் எழுதுவாங்க. நம்ம தான் எழுதப்போறோம். கொங்குதேசத்தை சேர்ந்த/சார்ந்த யாரு வேணும்னாலும் எழுதலாம்ங்க. அத்தனை பேருக்கும் இந்த, அதென்னங்க சொல்லுவாங்க.. ஆங்.. கடவுசொல்' அந்த கடவுசொல்லை குடுக்கறதுங்கிறது சாத்தியமில்லைங்கிறதால, அந்த சம்பிரதாயத்தையெல்லாம் கவனிச்சுக்க மட்டும் ஆளுக இருக்காங்க. மத்தபடி யாரு வேணும்னாலும் எழுதலாம்ங்க. கொங்குதேசத்துக்காரன் தான் எழுதனும்னு ஒரு வரையராவும் கிடையாதுங்க, எழுத நினைக்கிற யாரு வேணும்னாலும் எழுதலாம்ங்க.

என்னத்த எழுதறது ?

-எதை வேணும்னாலும் எழுதலாம்ங்க, கட்டுரை, கதை, கவிதை, சாதனையாளர்கள் குறிப்பு, சமையல்குறிப்பு, செய்திகுறிப்பு, நினைவுகுறிப்பு, சரித்திரகுறிப்பு'ன்னு குறிப்பிட்டும் எழுதலாம், நவீனம், பின்நவீனம், முன்நவீவனம்ன்னு குறிப்பில்லாமயும் எழுதலாம். ஆனா பாருங்க, நீங்க எழுதற சமாச்சாரத்துல 'கொங்கு'வாசம் கொஞ்சமாச்சும் இருக்கனும், அதை மட்டும் இப்பவே கண்டீசனா சொல்லிடறம்ங்க. (அந்த வாசம் சரியா இருக்குதான்னு பாக்கிறதுக்குன்னு ஒரு ரெண்டு மூணு காலபைரவ சாமிக இருக்குதுங்கோவ்)

எப்படி எழுத ?

-நீங்க உங்களுக்கே உங்களுக்குன்னு சொந்தமா ஆத்துக்கு கிழக்கால, வாய்க்காலுக்கு மேவறமா, இட்டேரிய ஒட்டினாப்புல சொந்தமாவோ இல்ல குத்தகைக்கோ வச்சிருக்கீங்களே மூணு கல்லு அளவுல, 'வலைப்பூ'ன்னு ஒண்ணு, அதுல எழுதிட்டு நமக்கு மயில'ண்ணன் மூலமா சேதி சொல்லிவிட்டாலும் சரிங்க, இல்லாட்டி நமக்கே நேரடியா உங்க சரக்கை அனுப்பிவச்சாலும் சரிங்க. எப்படியாவது ஒரு வகையில உங்களோட பங்களிப்பை ஆற்றிடுங்க.:)

வூடு கட்டி, வாசல் திறந்து வச்சாச்சு, முத வேலையா நம்ம கையால ஒரு பதிவு எழுதி கிரகமெல்லாம் கழிச்சாச்சு.. இன்னும் என்ன பார்த்துட்டு இருக்கீங்க..

சம்முகம்.. உட்றா போகட்டும்ம்...

ஸ்டார்ட்ட் ம்மீசிக்..


Comments

//கொங்கு தேசத்துக்காரன்னு பெருமையா சொல்லிகிட்டு குசும்போட திரியற நம்மள விட்டா வேற யாருங்க//

ready start..... :)

Wish u Happy Pongal... :)
வணக்கமுங்ணோவ்,

வணக்கம் அகெய்னுங்க,( இது கொங்கு மக்களுக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ் வணக்கம்.. ஹி ஹி)

பதிவ படிச்சனுங்க, நெம்ப சந்தோசமுங்க , நல்ல முயற்சி.. இந்த மரமண்டயனுக்கு எதாவது தோனுச்சுனா அப்பப்ப எழுதறனுங், போய்ட்டுவர்றனுங்.. :)

உங்களுக்கும், வுட்ல எல்லாருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கள். மற்ற இரு பதிவுகளை வாசித்துவிட்டு எழுதுகிறேன். தமிழ்மணம்/தேன்கூடு மறுமொழி நிலவர சேவையை உபயோகப்படுத்துங்கள். இன்னும் பலரைச் சென்றடையும்.
அண்ணா நம்ம ஏரியா ஏந்த பக்கமுங்க..


நான் இனிமே உங்க ஏரியாவுக்கு வரலாமுன்னு நினைக்கிறேன்,

நமக்கு அப்பட்டியேபோனீங்கனாக்கா

சுந்த்ராபுரத்தைதாண்டி , ஆங் ஈச்சனாரி தெரிய்ய்ம்லா..அதியும் தாண்டி அப்படியே கிணத்துகடவு வ்வந்தீங்க்கன்னு வச்சுகோங்க....அப்படியே 42 ஏறுங்க.. அப்புறம் வண்டியே கொண்டு போயி சேர்த்துரும்...

ஹி ஹி ஹி
Rangs said…
Nov..

Ippathaanungna vali therinfjadhu...

Sandhosamnganna...
Unknown said…
கொங்குப் பதிவுக்கு, சோழ மண்டலத்தின் வாழ்த்துக்களுங்..

இந்த மண்டலங்கள ஒன்னு சேக்குற தமிழுக்கு ஒரு கும்புடுங்..

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது. 1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்) 2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம் 3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.) 4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்] 5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை. 6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்) வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்) 7. என்றது - என்னுடையது. 8. உன்றது - உன்னுடையது. 9. அப்பச்சி- தாய்வழி தாத்தா 10. அப்பாரு- தந்தை வழி தாத்தா. 11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி 12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி 13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்) 14. நடவை - வெளிப்புறக் கதவு 15. வட்டல்...

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்...