
இருவாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கையின் படி முதல் கட்டமாக சென்னை-மணலி-எண்ணூர், செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சிபுரம் ஆகிய சாலைப்பகுதிகள் தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கோவை-சேலம், மதுரை-தூத்துக்குடி சாலைப்பகுதிகளும் இரண்டாம் கட்டமாக தொழிற்சிறப்பு சாலைகளாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தபப்டும் என்று சொல்லப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட அரசாணையின் படி கோவை-சேலம் சாலையின் நடுப்பகுதிகளான திருப்பூரும் ஈரோடும் (தேசிய நெடுஞ்சாலையில்ருந்து கொஞ்சம் தள்ளி இருந்தாலும்)மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பது இந்த திட்டத்துக்கு உரமூட்டுவதாக உள்ளது. இந்தியாவிலேயே ஒரு 160 கிலோமீட்டர் தொலைவுக்குள் நான்கு மாநகராட்சிகள் வேறு எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காவிரி பாயும் ஈரோடின் சுமார் 10-20 கிமீ பகுதியைத்தவிர்த்து இந்த 160 கிமீட்டருமே இயற்கை ஏய்த்துவிட்ட வறட்சியான பகுதிகளே. இந்த வறட்சியே இப்பகுதி மக்களின் தொழில் ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணி. பெரும்பாலும் எந்த மத்திய-மாநில அரசுகளின் நிறுவனங்கள் (சேலத்தில் மட்டும் சில இருக்கின்றன)இல்லாமல், அம்பானிகள், டாட்டாக்கள், பிர்லாக்களின் முதலீடு இல்லாமல் உள்ளூர் மக்களின் முனைப்பினாலே முனேறிய பகுதிகள் இவை. இப்போதாவது அரசுகள் எதாவது செய்ய நினைத்தால், இரண்டாம் கட்டத்துக்கு தள்ளிவைக்காமல் முதல் கட்டத்திலேயே இந்தப் பகுதியையும் எடுத்து மேம்படுத்த வேண்டும். முக்கியமாக புதிய மாநகராட்சிகளுக்கு எல்லை முடிவு செய்வதிலிருந்து, அடிப்படைக் கட்டமைப்பு ஏற்படுத்துவதிலிருந்து, பெரிய அளவில் திட்டமிட ஒரு பொது அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதாள சாக்கடை, நிலத்தடி மின்கம்பிகள், ரயில் பாலங்கள், நீர் வடிகால், பஸ்/ரயில்/விமான நிலையங்கள் போன்றவற்றிற்கு நகரிய ஆய்வு நிறுவங்கள்/ பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து தரநிர்ணயங்கள் ஏற்படுத்தவும், அவற்றின் அமலாக்கத்தை உறுதி செய்ய கண்காணிப்பு ஆணையங்களையும் ஏற்படுத்தினால், புதிதாக அமைக்கப்படும் சாலைகள், குடியிருப்புகளாவது எத்ரிகாலத்துக்குத் தகுந்த வகையில் இருக்கும். இல்லாவிட்டால் அங்கேயும், 'கட்டப்படும் இடிக்கப்படும்' கதையாகிவிடும்.
ஏற்கனவே (பெயருக்கு) மாநகராட்சிகளாக இயங்கும் கோவையிலும் சேலத்திலுமே இன்னும் இவை சரியாக செய்யப்படாத பொது புதிதாக அமையும் ஈரோடு திருப்பூர் மேல் பெரிதாய் நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் ஈரோடு திருப்பூர் மக்களுக்கு வாழ்த்துச் சொல்லி வைப்போம்.
தொடர்புடைய சுட்டிகள்:
Indian Express on Industrial Corridor of Excellence
Webindia123.com on Upgradation of Municipalities
Comments