Skip to main content

கொங்கு வட்டார வழக்கு- ‍முதல் பாகம்

கொங்கு நாட்டு வட்டார வழக்கில் புழங்கும் சில சொற்களின் தொகுப்பு இது.

1. பொழுதோட - மாலை நேரத்தில் (பொழுதோட அந்த வேலையை முடிக்கிறேன்)

2. கோழி கூப்பிட - அதிகாலை நேரம்

3. பொறகால - பின்புறம் (ஊட்டுக்கு பொற்கால பொடக்காலி இருக்குது -வீட்டின் பின்புறம் காலிபுறம் இருக்கிறது.)

4. பொடக்காலி- புறம் காலி (புறம் காலி என்பது காலி புறத்தின் முற்றுப் போலி) [காலி இடம் = கொல்லைப் புறம்]

5. அம்மணி - பெண்மணியைக் குறிக்கப் பயன்படும். பொதுவாக சகோதரி உறவுமுறை.

6. வெடுக்குனு இருக்குது- சுகமாக இருக்கிறது. வெந்தண்ணில தண்ணி வார்த்தா வெடுக்குனு இருக்கும் (சுடு நீரில் குளித்தால் சுகமாக இருக்கும்)
வெடுக்குன்னு - விரைவாக (என்ற பேனாவ வெடுக்குன்னு புடுங்கிட்டான்- என் எழுதுகோலை சட்டென்று பறித்துவிட்டான்)

7. என்றது - என்னுடையது.

8. உன்றது - உன்னுடையது.

9. அப்பச்சி- தாய்வழி தாத்தா

10. அப்பாரு- தந்தை வழி தாத்தா.

11. அமத்தா, அம்மச்சி, அம்மாயி- தாய்வழி பாட்டி

12. அப்பத்தா, ஆயா- தந்தைவழி பாட்டி

13. விசுக்குன்னு - திடீரென்று (அவன் விசுக்குனு கெளம்பிட்டான். -அவன் திடீரென்று கிளம்பிவிட்டான்)

14. நடவை - வெளிப்புறக் கதவு

15. வட்டல்- தட்டு

16. நருவசா- முழுவதுமாக

17. ஸோலி- பணி (கானங்காத்தால கடை கடையா என்ன ஸோலி உனக்கு?)

18. மடார் - உடனடியாக (ஒரு வேலையச் சொன்னா மடார்ன்னு முடிச்சுட்டு வேற ஸோலியப் பாரு)

19. மோந்துட்டு - மொண்டு (குடுவையில் நீர் மொண்டு வருதல்)

20. ஒட்டுக்கா - இணைந்து (ரெண்டு பேரும் ஒட்டுக்கா போயிட்டு வாங்க - இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)

21. மொளவு சாறு- மிளகு சாறு என்பதன் மாறுபாடு (அசைவக் குழம்பைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது)

22. எகத்தாளம் - திமிரு/ நக்கல் (பெரியவங்க கிட்ட எகத்தாளமா பேசாதே)

23. இட்டாரி/ இட்டேரி - தெரு. (கிராமப்புறங்களில் குறிப்பாக மண் சாலை)

24. அவுறு - அவிழ்த்தல் (கயிற்றை அவிழ்த்து விடு)

25. அவத்தைக்கு - அங்கே

26. இவத்தைக்கு - இங்கே

27. சலவாதி - மலம்.

28. போச்சாது- "பரவாயில்லை விடு" என்பது போல (ஏதாவது பொருள் தொலைந்து விடும் பட்சத்தில் போச்சாது விடு என்று ஆறுதல் படுத்துவார்கள். போய்ச் சாகிறது என்ற சொல் இப்படி மாறி இருக்கலாம் என்பது என் தீர்மானம்)

29. போசி- பாத்திரம்

30. அலுங்காம -அசைக்காமல் (போசிய அலுங்காம எடுத்துட்டு வா - பாத்திரத்தை அசைக்காமல் எடுத்து வா)

31. சிந்திடாம - உதிராமல்/கீழே கொட்டாமல் (அரிசி சிந்தாம அள பார்க்கலாம்)

32. மலக்காகிதம் - மழைக்காகிதம் - பாலிதீன் காகிதம்

33. பொறவு - அப்புறம். (கடைக்கு பொறவு போறேன்)

34. வெசனம் - வருத்தம்/சோகம் (ஏண்டா அவன் வெசனம் புடிச்சு உக்காந்திருக்கான்?)

35, 36. கருமாந்திரம் - கருமாதி என்பதாக இருக்கலாம். பிடிக்காத ஒரு நிகழ்வில் கருமாந்திரம், கெரகம் என்ற இரண்டு சொற்களும் அடிக்கடி உபயோகிக்கப் படும். (கருமாந்திரம் புடிச்சது)

37. பொசுக்குனு - சடக்கென்று (இவனுக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வந்துடும்)

38. பொக்குன்னு - வருத்தமாக (முட்டாய் தரன்னு சொல்லிட்டு தராம இருந்தா குழந்தை பொக்குன்னு போயிடும்)

39. பவுடு- கீழ் அன்னம் (லோலாயம் பேசாதடா. பவுட பேத்துடுவேன்)

40. தாவாக்கட்டை- கீழ் அன்னம்.

41. சீவக்கட்டை- விளக்குமாறு

42. கூமாச்சி- கூர்மையாக

43. தொறப்பு - பூட்டு

44. தொறப்புக் குச்சி - சாவி

45. மண்டு விடுதல்- சிறுநீர் கழித்தல்

46. மொடக்கடி - மொடக்கடி பண்ணாதே - இடக்காகச் செய்யாதே

47. ரவுசு - ரகளை என்று பொருள் படும் சொல்

48. பண்ணாடி -- கணவர்

49. பண்ணாட்டு -- ruling , power / வெட்டிப் பண்ணாட்டு -- useless show of power

50. வெருசா -- சீக்கிரமாய்

51. சாளை (லை) --- farmhouse usually in the middle of the farm

52. நடுவலவன் -- brother in between

53. பண்ணாமை (பண்ணாம) - நிலத்தில் பயிரிட்டிருப்பது.

54. மறுக்கா - மறுபடியும்.

55. ஒறம்பற - உறவின் முறை

56. சீசா - பாட்டில்

57. எத்தாசோடு - எவ்வளவு பெரிசு

58. நங்கையா - நாத்தனார்

59. பொடனி - பின்கழுத்து

60. நோம்பி (நோன்பு என்பதன் மருஉ) - பண்டிகை

61. எசகடம் = நேர்த்திக்கடன்

62. அக்கப்போர் -- தொந்தரவு / pestering

63. திருவாத்தான் -- கோமாளி / Jocker

64. குரவளை - தொண்டை

65. எச்சு - அதிகம்

66. முக்கு - முனை

இந்தச் சொற்கள் ஏற்கனவே என் வலைப்பதிவில் இருந்தவைதான். அதே பதிவில் நண்பர்கள் பின்னூட்டமாக கொடுத்த சொற்களும் இணைக்கப்பட்டுள்ளன‌. 'கொங்கு'விற்கென பிரத்தியேக பதிவு வரும் போது அங்கு ஒரு பிரதி வைப்பது அவசியமாகத் தோன்றிய்து. இன்னும் மூன்று தொகுப்புகள் இருக்கின்றன. அவற்றையும் இங்கு பதிவு செய்கிறேன்.

Comments

Thanks for sharing!

An Important effort! Keep Up!
Anonymous said…
It's very nice to hear. I was there in Kovai on early 90's. really very fantastic slang tamil.

Realy our KK dist too have good nice slang accent.
சரண் said…
நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்...
13 -ஆவது வழக்கிற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு..
"விசுக்கா" - தடவை
(உ.தா) "இன்னொரு விசுக்கா படத்த போடு.."
இது நம்ம "அடிதடி" படத்துல சத்யராஜ் சொல்லுவாரு..அதுக்கு பயில்வான் ரங்கனாதன் "என்ன சார் விஸ்க்கியா" - நு கேப்பாரு.. காமடியா இருக்கும்..
Anonymous said…
மக்குத்தனமா ஏதாச்சும் செஞ்சா சரியான மடச்சாம்பிராணியா இருக்கியேன்னு எங்க அம்மா சத்தம் போடும். அதையும் சேத்துக்குங்க.
மணி,
நல்ல முயற்சி. நல்ல பதிவு. மிகவும் தேவையான முயற்சியும் கூட. இன்னும் தொடருங்கள்.
Kasi Arumugam said…
அம்பிலி - (பொதுவாக) நாய்க்கு என்று தனியாகக் காய்ச்சப்படும் பல தானியக் கஞ்சி.
சாட்டவாரு - சாட்டை

அங்கராக்கு - சட்டை
கவுச்சாய் - டவுசர் (இரண்டும் வழக்கொழிந்து போனவை)

திருவாத்தான் மாதிரியே, மாக்கான் , மண்ட மாக்கான் - முட்டாள், அப்பாவி.

ஆசாரம் - வீட்டின் ஹால்
கைசாலை - சமையலறையாக பயன்படும் எக்ஸ்டென்ஷன்
அட்டாலி - கூரைப்பகுதியிலுள்ள சேமிப்பகம்
மேப்படி - நிலைக்கு மேலே உள்ள பெட்டி போன்ற அமைப்பு
நிலை - கதவு (நிலவு)


கொங்காடை - சாக்கு, மளைக்காயிதம் போன்றவற்றால் ஆன makeshift rain coat
கோடமழை - தென்மேற்குப் பருவ மழை
கொங்க மழை - வடகிழக்குப் பருவ மழை

உருப்படி - பட்டியில் உள்ள ஆடுமாடுகள் அல்லது, துவைக்கப் போடும் துணிகளின் எண்ணிக்கை

எரங்காடு - கரிசல் காடு
பொழி - வரப்பு போல பெரிய மண் அணைப்பு

கவலை - ஏற்றம்போல மாட்டை வைத்து நீரிறைக்கும் அமைப்பு (கபிலை செந்தமிழ் என்று நினைக்கிறேன்)

பொள்ளாச்சி வட்டாரப் பேச்சு வழக்கு.நினைவிலிருந்து சிலதும் நேரில் காணும் சிலதும்.
Anonymous said…
//மலக்காகிதம் - மழைக்காகிதம்//

மழ க்காகிதம் என்று மாற்றி விடுங்கள்.
Anonymous said…
ங்கோவ்,
சும்மா மதியேன நேர, நல்ல வேசைல குளுந்தண்ணி வாத்துட்டு கம்மஞ்சோறு உங்கராப்ள இருக்குதுங்...
முச்சூடும் படிச்சுபோட்டனுங்கோ, சில்ல கெளப்பி இருக்கீங்க...
ஏனுங், அப்பரங்கோ...
நெறைய எழுதிரிகிங்கோ இத உட்டுடீங்கலான்னு தெரிலீங்கோ,

அங்கராக்கு - சட்டைங்கோ
நாதாங்கி - கதவின் தாழ்பாள்.
அங்கராக்கு வாங்கிரு - சட்டைய கழட்டிறு
எசிலி - (எசிரி என் குறிப்பிட்டு இருந்தீர்கள்) போட்டி.
வார்த்த கேக்கறான் - கெட்ட வார்த்த பேசறான்.
நெடுக்கம் - நீளம்

நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்...
Shakthi said…
very happy to see this post . Love to see our language again.... nanri nabare
krishna said…
எசகடம் என்பது சரியா அல்லது எசவடம் என்பது சரியா எங்கள் ஊரில் எசவடம் என்றுதான் கூறுவார்கள்.
krishna said…
எசகடம் என்பது சரியா அல்லது எசவடம் என்பது சரியா எங்கள் ஊரில் எசவடம் என்றுதான் கூறுவார்கள்.

Popular posts from this blog

கொங்கு வட்டார வழக்கு - எட்டாம் பாகம்

1.ஒண்டிமினி - யாருடனும் கலந்து பழகாதவன் ( ஒண்டிமினியாட்ட இருந்த யாரு வருவாங்க நம்ம வீட்டுக்கு ) 2.கருமன் - பன்றி 3.சொண்டி - இடது கை பழக்கமுடையன் 4.மொறையுது - சத்தமிடுதல் ( வயிரு மொறையுது ) 5.கும்மாயம் - உப்புப்பருப்பு, இருட்டு 6.கரடு - குன்று 7.கரிசம் - அன்பு, சிரத்தை (கரிசம் கட்டிட்டு அழுகுது, கண்ணாடிச்செவுரு மூட்டீட்டு அழுகுது) 8.கால்மிதி - Foot mat , குதிங்காலில் ஏற்படும் கட்டி 9.கன்னிக்காப்பு - முதல்முறையாகப் பறிக்கும் திராட்சைப்பழம் ...... 10.குடுமி - தலையுச்சி, கொண்டை ( சொந்தக் குடுமிக்கி எண்ணெயக் காணோம், சுத்துக்குடுமிக்கி எண்ணெய வைக்கப் போயிட்டாளாம் ) 11.கூடக்கூட - உடனுக்குடன் ( எத்தன தாட்டி சொல்லரது கூடக்கூட பேசாதனு ) 12.கும்பி - வயிறு 13.கெடுவு - முறை,தவணை ( எத்தன கெடுவு கொடுக்கறது ) 14.கெடெ - இடம் ,வேளை ,உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் ( ஒரு கெடெயில இருக்க மாட்டியா - இங்கே இடம் என்னும் பொருளில்) ( நரிக்கு எடங்குடுத்தா கெடெக்கி இரண்டு ஆடு கேக்கு - இங்கு வேளை என்னும் பொருளில் ) ( கொழவி கெடெயில கிடக்கு - இங்கே உயிர் போகும் நிலையில் படுத்து இருத்தல் என்னும் பொருளில்)

திருச்செங்கோடு - ஒரு பயணம்.

" தி ருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசி திருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள் கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும் கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள் எமதே!" - கோவைக்கிழார் சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் - கொங்கேழு தலங்கள். ச மீபத்தில் உடன் பணியர் ஒருவரது திருமணத்திற்காகத் திருச்செங்கோடு வரை சென்று வந்தோம். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. மிதமாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு சென்னையின் மாலை நேரம். வீட்டில் உண்டு விட்டு, கிளம்புகையில் இரவு 9 மணி. 10:30க்கு சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் கிளம்புவதாகத் திட்டம். விஜயநகர் சென்று D70 பேருந்தைப் பிடித்து கிளம்பும் போது 9:17 ஆனது. தண்டீஸ்வரம் கோயிலைக் கடக்கையில் ஆரம்பமானது தடங்கல். கோயிலுக்கு முன் உள்ள ஒரு சந்திப்பில், ஒரு பேருந்து செயல் இழந்து நின்று விட்டது. அதனால், அனைத்து பக்கங்களில் இருந்தும் வர வேண்டிய அனைத்து வாகனங்களும் அப்படியப்படியே நின்று விட்டன. இலேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை வேகம் பிடிக்க ஆரம்பித்தது. 'மழை வந்ததால் மின்சாரம் போனதா' இல்லை 'மின்சாரம் சோரம் போனதால் மழை வந்ததா' என்